லொஹான் ரத்வத்தவின் செயலால் ஆட்சியாளர்களுடன் பயணிப்பது ஆபத்து.

“இராஜாங்க அமைச்சரொருவர் தமிழ் கைதிகளை எவ்வாறு தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தினார் என்பதைப் பார்த்தபோது, அழுத்தம் கொடுத்து அவரை அந்தப் பதவியிலிருந்து விலக வைத்திருந்தாலும், அதனால் ஏற்பட்டுள்ள அவமானத்திலிருந்து அரசாங்கம் விடுபட முடியாது” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூக் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 21ஆவது நினைவேந்தல் நிகழ்வு, இணையவழியூடாக இடம்பெற்றபோது, அதற்குத் தலைமை வகித்து கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“கடந்த நாட்களில் வெலிக்கடை மற்றும் அநூராதபுரச் சிறைசாலைகளுக்குச் சென்று சிறைச்சாலைக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் செய்திருக்கின்ற அட்டகாசத்தைப் பார்த்தால் மிகவும் பாரதூரமானது. அவ்வாறு இராஜாங்க அமைச்சரொருவர் தமிழ் கைதிகளை எவ்வாறு தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தினார் என்பதைப் பார்த்தபோது, அழுத்தம் கொடுத்து அவரை அந்தப் பதவியிலிருந்து விலக வைத்திருந்தாலும், அதனால் ஏற்பட்டுள்ள அவமானத்திலிருந்து அரசாங்கம் விடுபட முடியாது. இது சாமான்யமானதொரு விடயமல்ல.

இன்று தமிழ் சமூகம் இதற்காக ஆத்திரமடைந்திருக்கின்றது. முஸ்லிம் சமூகமும் இவ்வாறான விடயங்களில் ஆத்திரமடையவேசெய்யும். அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்த ஆட்சியாளர்களோடு ஒன்றித்து பயணிப்பது மிகவும் ஆபத்தானது.

தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மற்றும் எம்முடைய பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆகியோரை நினைவுபடுத்தி பார்க்கின்ற போது, இந்த இரண்டு ஆளுமைகளும் பொதுவான சில தன்மைகளைக் கொண்டிருந்தன. ஆரம்பத்தில் தந்தை செல்வாவுடைய காலத்தில் வன்முறை அரசியல் இல்லாமல் அஹிம்சை அரசியலை அடியொட்டிச் செய்துவந்த அரசியல் ஈற்றிலே வன்முறையின் பால் சென்ற பின்னர் சகோதர தமிழ் பேசும் சமூகங்கள் இரண்டும் அர்த்தமற்று அதற்குள் அள்ளுப்பட்டுக் கொண்ட போது ஏற்பட்ட அவலங்களை நாம் அனைவரும் கண்டிருக்கின்றோம்.

மீண்டுமொரு முறை இந்த இரண்டு சமூகங்களும் ஒன்றித்து பயணிக்கின்ற காலம் நெருங்கி வந்திருப்பதை நான் அண்மைக் காலமாக மிகவும் வலியுறுத்தி வருகின்றேன். ஆனால் இதைப் பற்றி பொதுவெளியில் பேசுவதை சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருந்தாலும் கூட , என்னுடைய உள்ளுணர்வு இன்று பரவலாக தமிழ் , முஸ்லிம் மக்களுக்கிடையில் பிராந்திய ரீதியில் இருக்கின்ற உள்ளார்ந்த முரண்பாடுகளை அடிக்கடி தூக்கிப்பிடித்துக் கொண்டு நிற்கக் கூடாது எனக் கூறுகின்றது.

பரஸ்பரம் கலந்துரையாடி, இணக்கப்பாட்டிற்கு வந்து அவற்றிலிருந்து சுமுகமான முறையில் விடுபட்டு, அதற்கப்பால் சென்று நமது இரண்டு சமூகங்களையும் அடித்து, நொறுக்கி, நாசமாக்கி அதற்கு மேலால் பயணிக்க விழைகின்ற மிக மோசமான மேலாதிக்க அணுகுமுறை தற்போது தோற்றமளிப்பதைப் பற்றி ஒன்றாக இருந்து சிந்திக்க வேண்டிய தருணம் வந்திருக்கின்றது.

விரைவில்என்னுடைய சக பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கவுள்ளேன். ஆளுங்கட்சிக்கு இன்று சாமரம் வீசிக் கொண்டிருக்கின்ற எம்மவர் உட்பட ஏனையவர்களையும் சேர்த்து எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பேசி, அண்மைய காலமாக நாங்கள் எதிர்நோக்கிவரும் எங்களுடைய பாரம்பரிய சட்டங்களான விவாக மற்றும் விவாகரத்து சட்டம், தனியார் சட்டங்கள் போன்றவற்றில் இஸ்லாத்தின் அடிப்படை சட்ட வரையறைகளைப் பேணி, அவற்றின் நடைமுறைகளில் சேர்க்க வேண்டிய சீர்த்திருத்தங்கள் பற்றி எமது சமயத் தலைமைகளுடனும்,துறைசார் சட்ட. வல்லுனர்களுடனும்,சமூக செயற்பாட்டாளர்களுடனும் கலந்துரையாடி நாங்கள் உடன்பாடு கண்ட விடயங்கள் உள்ளன.அவற்றைச் செயற்படுத்த முன்வர வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் இதற்கும் அப்பால் அரசியல் திருத்தங்களை, சட்டங்களை மாற்றி தேர்தல் முறையினூடாக சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை காவு கொள்கின்ற மிக மோசமான நடவடிக்கைகளுக்கு இன்றைய ஆட்சியாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கான சமிக்ஞைகள் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய சிக்கலான நிலைமையில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இதைப் பற்றி, தாங்கள் சோரம் போய்விட்டது பற்றிய எதுவித விவஸ்த்தையும் இல்லாமல் இன்னும், இன்னும் நொண்டிச் சாட்டுக்கள் சொல்லிக் கொண்டிருக்காமல், பல்லாயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்களும், போராளிகளும் ஆதங்கத்தோடும் ,ஆத்திரத்தோடும் இந்த விடயங்களைப் பேசிக் கொண்டிருக்கின்ற நிலையில், அவர்களது நிலைப்பாடுகள் நிச்சயமாக இந்த சமூகத்தின் விருப்பத்திற்குரியதல்ல என்பதைப் புரிந்து கொண்டு மறைந்த எமது தலைவருக்கு செய்கின்ற மிகப் பெரிய நன்றியறிதலாக அவர்களுடைய அத்தகைய போக்கில் இருந்து விடுபட வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.