அரசுடன் நேரடிப் பேச்சுக்கு செல்பவர்கள் துரோகிகள்! எம்.கே.சிவாஜிலிங்கம்.

“அரசை நம்பி நாங்கள் நேரடியாகப் பேசச் செல்வதென்பது தற்கொலைக்குச் சமமாகும். அதனை நாம் அனுமதிக்கமாட்டோம். அவ்வாறு செல்பவர்களை நாங்கள் துரோகிகளாக அறிவிப்போம்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்

யாழ்., வடமராட்சி, வல்வெட்டித்துறையிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐ.நா. பொதுச் சபையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றியுள்ளார். இலங்கையில் ஆட்சித் தலைவர்களாக இருப்பவர்கள் சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாகவே உள்ளது.

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அப்போதைய பொதுச்செயலாளர் பான் கி – மூன் இலங்கைக்கு வந்து முள்ளிவாய்க்கால் பகுதியைப் பார்த்த பின்னர் இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கூட்டறிக்கை ஒன்றை விடுத்தார்.

தமிழர் நலன்சார் விடயங்கள் தொடர்பில் இந்தியாவுக்குப் பலவற்றை ராஜபக்சவினர் சொன்னார்கள். ஆனால், இதுவரை எவையும் நிறைவேற்றப்படவில்லை. 13 பிளஸ் என்றார்கள். ஆனால், 13வது திருத்தமே சந்தேகமாக உள்ளது.

குற்றவாளியே எவ்வாறு நீதிபதியை நியமிக்க முடியும்? சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சர்வதேசப் பொறிமுறை ஊடாகவே நீதி கிடைக்கும். அதன்மூலமே வடக்கு கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் நமக்கான பரிகாரம் கிடைக்கும்.

ஒரு நாட்டினுடைய மத்தியஸ்தத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது மூன்றாம் தரப்பு இல்லாமல் யாரும் பேச முடியாது. புலம்பெயர்ந்த அமைப்புக்களாக இருக்கட்டும். தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களாக இருக்கட்டும். சர்வதேச மத்தியஸ்த குழு ஒன்றை வைத்தே அரசுடன் பேச வேண்டும். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது.

எங்களுடைய மக்கள் சார்பில் யாரும் தன்னிச்சையாக எந்த வெளிநாட்டு அமைப்பாக இருந்தாலும் உள்நாட்டில் இருக்கக்கூடிய கட்சியோ கூட்டணியோ பேச முடியாது. அதை நாங்கள் தெட்டத்தெளிவாகக் கூறிக்கொள்கின்றோம்.

சர்வதேச மத்தியஸ்தத்துடன் அடிப்படையிலேயே பேச்சுக்கள் நடத்தப்படவேண்டும். அரசனை நம்பி புருஷனைக் கைவிடுவதைப் போல் மீண்டும் மீண்டும் இலங்கை அரசை நம்பி ஏமாறுவோமாக இருந்தால் எங்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

இருக்கின்ற பிரச்சினைகளை நீர்த்துப்போகச் செய்கின்ற நிகழ்ச்சி நிரலே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. இதற்காக நீதி கிடைப்பதற்கான அரசியல் தீர்வை நோக்கி நாம் முன் நகரவேண்டும்.

உலகத்தில் இருக்கக்கூடிய அத்தனை புலம்பெயர் தமிழர்களிடமும் தொப்புள் கொடி உறவுகளான தாய்த் தமிழக மக்களிடமும் தாயகத்தில் உள்ள மக்களிடம் மிகவும் பணிவாகக் கேட்க விரும்புவது, இந்தச் சந்தர்ப்பத்திலே அரசை நம்பி நாங்கள் நேரடியாகப் பேச்சுக்குச் செல்வதென்பது தற்கொலைக்குச் சமமாகும். அதனை நாம் அனுமதிக்கமாட்டோம். அவ்வாறு செல்பவர்களை நாங்கள் துரோகிகளாக அறிவிப்போம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.