அமெரிக்காவுக்கு இலங்கையை தாரைவார்க்கின்றது இந்த அரசு.

“இலங்கையை அமெரிக்காவுக்குத் தாரைவார்க்கும் செயலையே இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது. மின் நிலையங்களை அமெரிக்காவுக்கு வழங்குகின்ற சந்தர்ப்பத்தில், எதிர்காலத்தில் சகல மின் நிலையங்களும் முடக்கப்பட்டு இந்த நாடு பிளவுபடுகின்ற ஒரு நிலைக்குச் செல்லுமா என்ற சந்தேகம் எமது மத்தியில் காணப்படுகின்றது.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இன்று இந்த அரசின் செயற்பாடுகள் அனைத்தும் மீண்டும் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளாகவே காணப்படுகின்றன. குறிப்பாக கோட்டாபய ராஜக்சவின் அரசை உருவாக்குவதில் பிரதான காரணமாக இருந்தது உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குல் தொடர்பான அறிக்கைகள். அதேபோன்று இலங்கை மத்திய வங்கியின் விடயங்களும் பிரதான காரணமாக இருந்தன. எம்.சி.சி. ஒப்பந்தமும் பிரதான காரணமாக இருந்தன.

நாட்டை இரண்டாக்கும் இந்த எம்.சி.சி. ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டால் நாளை இலங்கைக்குள் கடவுச்சீட்டுடனேயே பயணிக்கின்ற ஒரு சூழல் உருவாகும் என்ற பிரசாரங்கள் மும்முராமாக இந்த அரசால் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறான பிரசாரங்களை முன்னெடுத்து இந்த அரசு ஆட்சியமைத்தன் பின்னர், இன்று இந்த அரசின் செயற்பாட்டில் மீண்டும் மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

இன்று சில மின் நிலையங்கள், அதிலுள்ள பங்குகள் ஆகியவற்றை இரவோடிரவாக அமெரிக்காவுக்கு வழங்குகின்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது.

அமைச்சரவையில் இருக்கின்ற அமைச்சர்களுக்குக்குக்கூட தெரியாமல் அவற்றை அமெரிக்காவுக்கு வழங்குகின்றவர்கள் யார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இன்று ஜனாதிபதி அமெரிக்காவின் உறுப்பினராகக் காணப்படுகின்றார். அதேபோன்று நிதி அமைச்சரும் அமெரிக்காவின் உறுப்பினராகக் காணப்படுகின்றார். இன்று இவர்களது செயற்பாட்டின் மூலமாக அமெரிக்காவுக்கு நாட்டை தாரைவார்க்கின்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.