‘குலாப்’ மறு அறிவித்தல் வரை கடல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம்.

இலங்கையில் பல மாவட்டங்ளில் மழையுடனான காலநிலை இன்றும் நீடிக்கும் அதேவேளை குலாப் சூறாவளி இன்று மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மறு அறிவித்தல் வரை கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை நிலவரம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது வட அகலாங்கு 18.3N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.9E இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. இத் தொகுதியானது மேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மாலையளவில் இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் – தென் ஒடிசா கரையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் வட அகலாங்குகள் 15.0N – 20.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 80.0E – 90.0E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதோடு, இந்தப் பிரதேசத்தில் கடலில் இருப்போர் உடனடியாக பாதுகாப்பான பிரதேசத்திற்கு நகருமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை : மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் பலத்தமழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.