ரஸ்ய தேர்தல் – கட்சிகளுக்கு வெற்றி, மக்களுக்கு…? : சண் தவராஜா

ரஸ்யாவில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நடப்பு அரசுத் தலைவர் விளாடிமிர் புட்டின் ஆதரவுக் கட்சியான ஐக்கிய ரஸ்யாக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. எனினும், 2016இல் நடைபெற்ற தேர்தலோடு ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 5 வீத வாக்குள் குறைவாகவே பெற்றுள்ளது. மறுபுறம், ரஸ்ய ஒன்றிய பொதுவுடமைக் கட்சி எதிர்பார்க்கப்பட்டதையும் விட அதிக வாக்குகளைப் பெற்று பலரின் புருவத்தையும் உயரச் செய்துள்ளது. அதேவேளை, ஆளும் ஐக்கிய ரஸ்யாக் கட்சிக்கு ஆதரவாக தேர்தல்களில் மோசடிகள் நிகழ்த்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
கொரோனப் பெருந் தொற்று காரணமாக இவ்வருடம் நடைபெற்ற தேர்தல் 3 நாட்களுக்கு நடத்தப்பட்டது. அது மாத்திரமன்றி முதல் தடவையாக இணையத் தளம் மூலம் வாக்களிப்பதற்கான வசதியும் வழங்கப்பட்டிருந்தது. பரீட்சார்த்தமாக நடைபெற்ற இணையவழி வாக்கெடுப்பில் 85 பிராந்தியங்களைக் கொண்ட ரஸ்யாவின் 9 பிராந்தியங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தன.

செப்டெம்பர் 17, 18, 19 ஆகிய திகதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 14 அரசியற் கட்சிகளும், சுயேட்சைகளும் பங்கு பெற்றன. டூமா என அழைக்கப்படும் ரஸ்ய நாடாளுமன்றில் உள்ள 450 ஆசனங்களுக்காக நடைபெற்ற இந்தத் தேர்தலைக் கண்காணிக்க உள்ளூர் கண்காணிப்பாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

ரஸ்ய தேர்தல் முறைமைகளின் பிரகாரம் 225 உறுப்பினர்கள் நேரடி வாக்களிப்பு முறையிலும், மீதி 225 பேர் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர். தேர்தல் முடிவுளின் படி 49.82 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ள ஐக்கிய ரஸ்யாக் கட்சி 198 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள ரஸ்ய ஒன்றிய பொதுவுடமைக் கட்சி 18.93 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ள ரஸ்ய லிபரல் ஜனநாயகக் கட்சி 7.55 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. எனினும் நேரடித் தெரிவு மூலம் இந்தக் கட்சிக்கு 2 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்துள்ளன. நான்காவது இடத்தைப் பிடித்துள்ள உண்மைக்கான ரஸ்ய நீதிக் கட்சி 7.46 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ள போதிலும் 8 ஆசனங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது இடத்தில் உள்ள புதிய மக்கள் கட்சி 5.32 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. எனினும் நேரடித் தேர்தலில் இக்கட்சி ஆசனங்கள் எதனையும் வெற்றிபெறாத போதிலும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் இக்கட்சிக்கு ஆசனங்கள் கிட்ட வாய்ப்பு உள்ளது. 5 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகளைப் பெற்ற கட்சிகளே விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் ஆசனங்களைப் பெறும் வழிவகையே ரஸ்ய அரசியலமைப்பில் உள்ளமை நினைவில் கொள்ளத்தக்கது.

இதேவேளை, 0.8 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற கட்சியான ரொடினா ஒரு ஆசனத்தையும், 0.52 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற வளர்ச்சிக்கான கட்சி ஒரு ஆசனத்தையும், 0.15 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற சிவிக் பிளட்போம் கட்சி ஒரு ஆசனத்தையும், சுயேட்சைகள் 5 ஆசனங்களையும் நேரடித் தேர்தல் முறையின் கீழ் பெற்றுக் கொண்டுள்ளன.

விகிதாசார வாக்குகள் பகிரப்பட்டதன் பின்னர் தற்போது ஐக்கிய ரஸ்யாக் கட்சி மொத்தம் 324 ஆசனங்களைப் பெற்றுள்ளது. கடந்த முறையோடு ஒப்பிடும் போது இக்கட்சி தற்போது 19 ஆசனங்களைக் குறைவாகப் பெற்றுள்ளது. அதேவேளை கடந்த நாடாளுமன்றத்தில் 42 ஆசனங்களைப் பெற்றிருந்த ரஸ்ய ஒன்றிய பொதுவுடமைக் கட்சி இம்முறை 15 ஆசனங்களை மேலதிகமாகப் பெற்றிருக்கின்றது.

கடந்த நாடாளுமன்றில் 23 இடங்களைப் பெற்றிருந்த உண்மைக்கான ரஸ்ய நீதிக் கட்சி இம்முறை 4 இடங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. மறுபுறம் புட்டின் ஆதரவுக் கட்சி எனக் கருதப்படும் ரஸ்ய லிபரல் ஜனநாயகக் கட்சி மொத்தம் 21 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. எனினும், இந்தக் கட்சி கடந்த முறை பெற்றிருந்த ஆசனங்கள் 18ஐ இழந்திருக்கின்றது. அதேநேரம், புதிதாக நாடாளுமன்றில் நுழையும் புதிய மக்கள் கட்சி 13 இடங்களைப் பெற்றிருக்கின்றது. அலெக்ஸை நெச்சோவ் எனப்படும் ஒரு அழகியல் சாதன தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரால் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்தக் கட்சி முதல் தேர்தலிலேயே 5 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருப்பது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகின்றது.
தற்போதைய நிலையில் ஆளும் ஐக்கிய ரஸ்யாக் கட்சி நாடாளுமன்றில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி இருந்தாலும் அதன் செல்வாக்கு வெகுவாகக் குறைவடைந்து வருவதை மறைப்பதற்கில்லை. நடைபெற்று முடிந்த தேர்தலில் 51.68 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. இது கடந்த முறையை விட 3.8 விழுக்காடு அதிகமாயினும், ஒரு நாட்டில் சராசரியாக 50 விழுக்காடு மக்கள் வாக்களிக்க முன்வரவில்லை என்பது ஜனநாயகத் தேர்தல் முறைமையில் அவர்கள் நம்பிக்கை இழந்திருப்பதன் காட்டியாகவே கொள்ளப்பட வேண்டும். உலகளாவிய அடிப்படையில் மக்களின் வாக்களிப்பு வீதம் அண்மைக் காலங்களில் குறைந்து கொண்டு செல்லும் போக்கு அவதானிக்கப்பட்டாலும், இவ்வாறு வாக்களிப்பு வீதம் குறைந்து செல்வதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் இந்தப் போக்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மறுபுறம், சோவியத் ஒன்றிய காலகட்டத்தில் மிகவும் வலுவாக இருந்த கட்சியான பொதுவுடமைக் கட்சி 90களின் பின்னான காலகட்டத்தில் மிகவும் வலுவிழந்த நிலையில் இருந்து தற்போது மீளவும் மக்களின் செல்வாக்கைப் பெறத் தோடங்கியுள்ளமை அவதானத்துக்கு உரியதாக உள்ளது. ரஸ்ய பொதுவுடமைக் கட்சி முந்திய தலைமுறையினரின் கட்சியாகவே இருந்தவந்த நிலைமை தற்போது மாற்றம் பெற்று வருவது நோக்கத்தக்கது. இந்த நிலைமை மாற்றம் கட்சியின் கடின உழைப்பின் வெளிப்பாடாக ஒருபுறம் தென்பட்டாலும், மறுபுறத்தில் முதலாளித்துவ ஐனநாயகம் தொடர்பிலான மக்களின் விரக்தியின் அடையாளமாகவும் கொள்ளப்பட வேண்டும்.
ஒரு நாட்டில் ஜனநாயகம் நிலவுகின்றது என்பதற்கான காட்டியாக நீதியாக நடைபெறும் தேர்தல்களே உள்ளன. அவ்வாறு நடைபெறும் தேர்தல்களில் மக்கள் அதிகளவில் பங்கு கொள்ளும் போது, அவர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதையும், தேர்தல்களில் போட்டியிடும் கட்சிகளில் விருப்புக் கொண்டுள்ளார்கள் என்பதையும் உறுதி செய்துகொள்ள முடியும். வல்லரசு நாடான ரஸ்யாவில் தேர்தல்களில் பங்கு கொள்ளும் மக்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக வீழ்ச்சிகண்டுவரும் நிலையில், ஆட்சியைக் கைப்பற்றி விட்டோம் என ஒரு கட்சி மார்தட்டுவதை ரசிக்க முடியாது.

வாக்களித்த மக்களில் அதிக விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளோம் எனக் கூறுகையில், வாக்களிக்காதவர்கள் மற்றும் எதிர்த்து வாக்களித்தவர்கள் அதைவிடவும் அதிக வீதமாக இருக்கும் போது, அதனை வெற்றி எனச் சொல்லிவிட முடியாது. இதனைத் தேர்தலில் பங்குகொள்ளும் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மறுபுறம், கட்சிகள் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் அதிருப்தி இருந்தாலும் தமது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டிய பொறுப்பில் இருந்து மக்கள் விலகி இருப்பது நல்லதல்ல. அவ்வாறு நடந்து கொள்வது, மீண்டும் மீண்டும் விரும்பாத சக்திகள் ஆட்சியைப் பிடிப்பதற்கே வழிகோலும். எனவே, தமது பொறுப்பை உணர்ந்து மக்கள் தேர்தல்களில் வாக்களிப்பது அவசியமாகின்றது.

Leave A Reply

Your email address will not be published.