கூந்தல் வளர இயற்கை குறிப்புகள்,

எத்தனை வைத்தியங்கல் இருந்தாலும் பாட்டி வைத்தியத்துக்கு தனி மதிப்பு என்பது போன்று பாரம்பரியமான அழகு குறிப்புக்கு தனி மவுசு உண்டு. அதிலும் அழகு குறிப்பில் முன்னோர்கள் பின்பற்றி வந்த பல ரகசிய அழகு குறிப்புகளை பெரும்பாலும் இப்போது பின்பற்றுவதில்லை. நூற்றாண்டுகளாக சருமத்துக்கும் கூந்தலுக்கும் செய்து வந்த பராமரிப்புகள் பலவும் இயற்கையானவை. அவை கூந்தலுக்கும் சருமத்துக்கும் எவ்வித பாதிப்பையும் அளிக்காதவை. அழகு குறித்த ரகசிய பொக்கிஷங்களில் கூந்தலின் அழகுக்கும் வளர்ச்சிக்கும் செய்த குறிப்புகளை தெரிந்துகொள்வோம்.

​வேப்பிலை

வேப்பிலை பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் இருக்க கூடிய மரம் ஆகும். வேப்பிலை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் வேர்களை வலுப்படுத்துவதற்கும் பெயர் பெற்ற மூலிகை. இது முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான சிறந்த தீர்வாகும். உச்சந்தலையில் உள்ள நிலைகளை குணப்படுத்துவதற்கு முடி உதிர்தலை குறைப்பதற்கும் உதவுகிறது.

வேப்பம் இலைகளை எடுத்து 15 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து குளிரவைக்கவும். பிறகு இந்த திரவத்தை வடிகட்டி வேப்பிலை தண்ணீரை கொண்டு முடியை அலசி எடுக்கவும்.

உலர்ந்த வேப்பிலை தூளாக இருந்தால் அதை பேஸ்ட் ஆக்கி கூந்தலில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசி எடுக்கவும். முன்னோர்கள் சீயக்காயில் வேப்பிலை இலையை சேர்ப்பார்கள். இது உச்சந்தலை தொற்றை தடுப்பதால் முடி வளர்ச்சி பாதிக்காமல் இருக்கும்.

​கற்றாழை

சோற்றுகற்றாழை உடலுக்கு நன்மை செய்ய கூடிய பொருள். உச்சந்தலையின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது, முடி கொட்டுதலை தவிர்ப்பது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது என எல்லாமே கற்றாழை செய்யகூடும். கற்றாழை நீள்வாக்கில் வெட்டி அதன் மடலை எடுத்து உள் இருக்கும் ஜெல் போன்ற பகுதியை உச்சந்தலையில் தடவி 40 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசி எடுக்கவும்.

கற்றாழையுடன் தேங்காயெண்ணெய், தேன் சேர்த்து கூந்தலுக்கு பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் உடையாமல் பாதுகாக்கலாம். கற்றாழை ஜெல், தேங்காயெண்ணெய், தேன் அனைத்தையும் கலந்து உச்சந்தலையில் தடவி கூந்தலை அலசி எடுக்கவும்.

கற்றாழை ஜெல்லை சீயக்காயில் கலந்தும் கூந்தலை அலசி எடுக்கலாம். சோறு வடித்த கஞ்சிக்கு மாற்றாக இதையும் கலந்து பயன்படுத்தலாம். இந்த மூலிகைகளை சீயக்காயோடு கலந்தும் தனித்தும் பயன்படுத்தினால் கூந்தல் அழகாக நீளமாக வளரக்கூடும்.

Femina
​வெந்தயம்

வெந்தயம் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், கை வைத்தியம் என எல்லாவற்றிலும் இதன் பலன் பெரிதும் உண்டு. முடி வளர்ச்சிக்கு ஏற்ற பொருள் வெந்தயம். சமையலறையில் இருக்கும் அஞ்சறைபெட்டியில் முக்கியமான பொருள் என்றாலும் இது தலைமுடியின் கடுமையான மாற்றத்தை கொண்டு வரக்கூடிய உணவு.

முடி உதிர்தல், முடி மீண்டும் வளர்வது, முடியின் ஒட்டுமொத்த நிலையை மேம்படுத்துவது என எல்லாவற்றுக்கும் சிறந்த தீர்வாகும்.

2- 3 டீஸ்பூன் வெந்தயத்தை எடுத்து வறுத்து தூள் செய்து வைக்கவும். இதை பேஸ்ட் போல் குழைத்து உச்சந்தலையில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து கூந்தலை அலசி எடுக்கவும். 1 டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் இதை குடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியமும் பெறலாம். வெந்தயத்தை சீயக்காயில் சேர்த்து அரைப்பார்கள்.

​நெல்லிக்காய் ஹேர் மாஸ்க்

நெல்லிக்காய் என்பது சிறந்த கண்டிஷனர் ஆகும். இது பொடுகு நீக்க பயன்படுத்தும் சிறந்த பொருள். வைட்டமின் சி கொண்டிருப்பதால் இது முன்கூட்டியே நரைப்பதை தடுக்க செய்கிறது. உச்சந்தலையில் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் தலைமுடி வளர்ச்சியை துரிதப்படுத்தவும் செய்யும்.

நெல்லிக்காயை கொட்டை நீக்கி உலர வைத்து 6 டீஸ்பூன் எடுத்து தண்ணீருடன் கலந்து பேஸ்ட் ஆக்கவும். தலைமுடியை பிரித்து பேஸ்ட்டை உச்சந்தலை முதல் தலைமுடி நுனி வரை தடவி எடுக்கவும்.

இதை 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து தலையை அலசி எடுக்கவும். மாதம் ஒரு முறை இதை பேஸ்ட் ஆக்கி கூந்தலில் போடலாம். நெல்லிக்காயையும் சீயக்காயில் சேர்த்து அரைப்பதால் அது முடியை இளநரை பிரச்சனையிலிருந்து பாதுகாக்கும்.

தேங்காய் எண்ணெய்

இப்போது போன்று பலதரப்பட்ட எண்ணெய்கள் இந்தியாவில் பாரம்பரியத்தில் இல்லை. நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய் இரண்டு மட்டுமே கூந்தலில் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் கூந்தல் வறட்சி இல்லாமல், எண்ணெய் சுரப்பு இல்லாமல் இருக்க தேங்காயெண்ணெய் பெரிதும் உதவக்கூடும்.

உச்சந்தலையில் தேங்காயெண்ணெய் தடவி கொள்வதன் மூலம் அது கூந்தலுக்கு பல அதிசயங்களை செய்யலாம். தேங்காயெண்ணெயை வெதுவெதுப்பான சூட்டில் சூடு செய்து உச்சந்தலையில் தடவி ஆயில் மசாஜ் செய்வது கூந்தலுக்கு நல்லது. இதை இரவு நேரத்தில் தடவி இரவு முழுவதும் கூந்தலில் ஊறவைத்து மறுநாள் காலை மந்தமான நீரில் கழுவி எடுக்கலாம்.

குளிர்ந்த நீரில் அலசுங்கள்

குளிர்ந்த நீரில் கூந்தலை அலசுவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். தலைமுடிக்கு வெந்நீரோ அல்லது சற்று சூடான நீரோ நன்மை பயக்காது. குளிர்ந்த நீரில் தான் கூந்தலை அலசி எடுக்க வேண்டும். குளிர்ந்த நீர் இரத்த ஓட்டத்தை தூண்டக்கூடும். தலைமுடியை அற்புதமாக வைத்திருக்க செய்யும்.

Leave A Reply

Your email address will not be published.