ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல்-இன் (வியாழக்கிழமை) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. 135 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், பாப் டு பிளெஸ்ஸி இந்த முறையும் சிறப்பான தொடக்கத்தையே தந்தனர்.

முதல் மூன்று ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், புவனேஷ்வர் குமார் வீசிய 4-வது ஓவரில் ருதுராஜ் மற்றும் டு பிளெஸ்ஸி தலா 1 சிக்ஸர் பறக்கவிட்டு கலக்கினர். இதே அதிரடியை அடுத்த 3 ஓவர்களிலும் தொடர பவர் பிளே முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்தது.

வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 6-இல் நீடிக்கும் வகையில் சீரான வேகத்தில் இருவரும் விளையாடினர். அச்சுறுத்தல் பந்துவீச்சாளரான ரஷித் கானையும் பவுண்டரி, சிக்ஸருடன் வரவேற்று நம்பிக்கையான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
முதல் விக்கெட்டுக்கு 10 ஓவர்களில் 75 ரன்கள் சேர்த்த நிலையில் 45 ரன்கள் எடுத்திருந்த ருதுராஜ், ஜேசன் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலியும் டு பிளெஸ்ஸியுடன் இணைந்து நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 17 ரன்கள் எடுத்திருந்தபோது ரஷித் கான் சுழலில் எதிர்பாராத வகையில் போல்டானார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 2 ரன்களுக்கு ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்த விக்கெட் சரிவிலிருந்து மீள்வதற்குள் டு பிளெஸ்ஸியும் அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, அம்பதி ராயுடுவுடன் கேப்டன் தோனி இணைந்தார். கடைசி 4 ஓவர்களில் சென்னை வெற்றிக்கு 26 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. புவனேஷ்வர் குமார் சிறப்பாக வீசி 4 ரன்கள் மட்டுமே கொடுத்ததால், கடைசி 3 ஓவர்களில் 22 ரன்கள் தேவைப்பட்டன.

இந்த நிலையில், சித்தார்த் கௌல் 18-வது ஓவரை வீசினார். 5-வது பந்தில் மட்டுமே ராயுடு பவுண்டரி அடித்ததால் 6 ரன்கள் கிடைத்தன.
கடைசி 2 ஓவர்களில் 16 ரன்கள் தேவை என்ற நிலை இருக்க மீண்டும் புவனேஷ்வர் குமார் பந்துவீசினார். இரண்டாவது பந்தில் ராயுடு சிக்ஸரைப் பறக்கவிட்டு நெருக்கடியைக் குறைத்தார்.

அதே ஓவரின் 4-வது பந்தில் தோனி 1 பவுண்டரி அடிக்க கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது. கடைசி ஓவரை மீண்டும் சித்தார்த் கௌல் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தை மைதானத்துக்கு வெளியே சிக்ஸராகப் பறக்கவிட்டு வெற்றியை உறுதி செய்தார் தோனி. 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது. தோல்வியினால், ஹைதராபாத் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.

Leave A Reply

Your email address will not be published.