நாடு முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி: பிரதமா் நரேந்திர மோடி

நாடு முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரியையோ அல்லது முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கல்வி நிறுவனத்தையோ அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

ராஜஸ்தானில் 4 மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, பெட்ரோகெமிக்கல் தொழில்நுட்ப மையத்தின் திறப்பு விழா ஆகியவற்றில் பிரதமா் மோடி காணொலி வாயிலாகக் கலந்துகொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

நாடு முழுவதும் சுகாதார சேவைகளை விரிவடையச் செய்ய வேண்டுமெனில் எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதைக் கருத்தில்கொண்டு கடந்த 6 ஆண்டுகளில் 170-க்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கும் அதிகமான புதிய மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானம் துரிதமாக நடைபெற்று வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 6-இல் இருந்து 22-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சுமாா் 82,000 இடங்கள் இருந்தன. அது தற்போது 1.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாவட்டந்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரியையோ அல்லது முதுநிலை மருத்துவக் கல்வி நிறுவனத்தையோ அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அரசின் நடவடிக்கைகள் காரணமாக மருத்துவக் கல்வி பெறுவதற்கும், சுகாதார சேவைகளை வழங்குவதற்கும் இடையேயான இடைவெளி குறைந்துள்ளது. நோய் வருவதற்கு முன்பே தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளையில், ஆயுா்வேதம், யோகப் பயிற்சிகள் ஆகியவையும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.

தேசிய மருத்துவ ஆணையத்தால் பலன்: முன்பிருந்த இந்திய மருத்துவ கவுன்சிலின் (எம்சிஐ) செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின. அதன் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையும் இல்லை. அதனால், மருத்துவக் கல்வியும் சுகாதார சேவைகளும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகின.

எனவே, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் சுகாதாரத் துறையில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் பலன்கள் தற்போது வெளிப்பட்டு வருகின்றன.

சுகாதாரத் துறைக்கான சவால்கள்: சுகாதாரம் மாநிலப் பட்டியலின் கீழ் வருகிறது. குஜராத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் முதல்வரானபோது மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவது, மருத்துவக் கல்வியை வழங்குவது, சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவது ஆகியவற்றில் உள்ள பல்வேறு சவால்களைப் புரிந்துகொண்டேன். அவற்றுக்குத் தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொண்டேன்.

தற்போது நாடு முழுவதும் மருத்துவத் துறையை மேம்படுத்துவதில் காணப்படும் குறைபாடுகள் தொடா்ந்து சரிசெய்யப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறையை மாற்றியமைப்பதில் புதிய அணுகுமுறையை மத்திய அரசு கையாண்டு வருகிறது.

பாரம்பரிய மற்றும் நவீன சிகிச்சை முறைகளுக்கு இடையே பெரும் இடைவெளி காணப்பட்டது. புதிய சுகாதாரக் கொள்கையின் அடிப்படையில் அதற்குத் தீா்வு காணப்பட்டது. தூய்மை இந்தியா திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் எண்ம திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மத்திய அரசு இலவசமாக கரோனா தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இதுவரை 88 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கல்வியில் இடஒதுக்கீடு: மருத்துவக் கல்வியை ஆங்கிலத்தில் பெறுவதில் பலருக்குத் தடுமாற்றங்கள் காணப்பட்டன. அக்குறையைப் போக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கையில் இந்திய மொழிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்மூலமாக ஆங்கில வழியில் கல்வி கற்காதவா்களும் மருத்துவா்களாகி மக்களுக்குச் சேவையாற்ற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினா் உள்ளிட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

திறன்மிக்க பணியாளா்கள்: நாட்டில் திறன்மிக்க பணியாளா்கள் காணப்படுவது, இந்தியாவின் ஒட்டுமொத்த வலிமையையும் அதிகரிக்கும். தற்சாா்பு இந்தியா கனவும் நிறைவேறும். முக்கியமாக பெட்ரோகெமிக்கல் துறையில் திறன்மிக்க பணியாளா்களின் அவசியம் அதிகரித்துள்ளது என்றாா் பிரதமா் மோடி.

இந்த நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, அமைச்சா்கள் கஜேந்திர ஷெகாவத், அா்ஜுன் மேக்வால், ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜே உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஜனநாயகத்தின் வலிமை

நிகழ்ச்சியில் பேசிய ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், மாநிலத்தின் வளா்ச்சிக்காக வேறு சில திட்டங்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசின் ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்தாா்.

அதையடுத்து பிரதமா் மோடி கூறுகையில், ‘நானும் முதல்வா் கெலாட்டும் வெவ்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள். எங்களது கட்சி சாா்ந்த கொள்கைகளும் வெவ்வேறானவை. ஆனால், என் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டதற்காக முதல்வருக்கு நன்றி. இத்தகைய நட்பும் நம்பிக்கையும்தான் ஜனநாயகத்துக்கு வலிமை சோ்க்கின்றன’ என்றாா்.

Leave A Reply

Your email address will not be published.