விவசாயத்தை வாழ வைக்க வேண்டும் என்றால் நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும் – சீமான் கொந்தளிப்பு

விவசாயத்தை வாழ வைக்க வேண்டும் என்றால் நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும். கண்மாய்க் கரையில் அமர்ந்து ஆண்கள் சீட்டு ஆடுகிறார்கள், பெண்கள் பல்லாங் குழி ஆடுகிறார்கள். கேட்டால் நூறுநாள் வேலை திட்டம் என்கிறார்கள், ஆனால் அதே கிராமத்தில் விவசாய வேலை செய்ய ஆள் கிடைப்பது இல்லை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கொள்கை, கோட்பாட்டின் அடிப்படையில் தொடர்ச்சியாக பயணிப்பதுதான் வெற்றி. மாறாக சமரசம் செய்து கொண்டு, அவரோடு இவரோடு சேர்ந்து கொண்டு வாக்குகளுக்கு காசு கொடுத்து பெறுவது வெற்றி கிடையாது.

அடுத்த தேர்தல் வெற்றியை எண்ணி நாங்கள் நிற்கிறோம். நிரந்தரமான வெற்றியைத் தேடி போராடிக் கொண்டிருக்கிறோம். வாக்கு சதவீதத்தின் படி நாங்கள் வளர்ந்து கொண்டுதானே இருக்கிறோம். நாங்கள் சீட்டை பெற வரவில்லை, நாட்டை கைப்பற்ற வந்துள்ளோம். ஜனநாயக நாட்டில் உண்மையோடும், நேர்மையுடனும் தேர்தலை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் என்ன நிர்வாகம் செய்கிறீர்கள். இங்கே அனைவருக்கும் சம வாய்ப்பு இருக்க வேண்டும். சின்ன பசங்களாகிய எங்களைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள். உள்ளாட்சி தேர்தலில் என் தம்பிகள், தங்கைகள் வெற்றிபெற்றால் ஊழலற்ற, லஞ்சமற்ற நேர்மையான நிர்வாகத்தை கிராமங்களில் தருவார்கள்.

வேளாண் சட்டத்தை எதிர்த்து நாங்கள் போராடுவோம். வேளாண் சட்டம், வேளாண் குடிகளுக்கு மட்டும் பாதிப்பு என்பது பைத்தியக்காரத்தனம். அது ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் எதிரானது. விவசாயத்தை வாழ வைக்க வேண்டும் என்றால் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும். மனித ஆற்றலை உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியை பெருக்கி, லாபத்தை ஈட்டுகின்ற நாடு எதுவோ அதுதான் வாழும், வளரும்.

உழைப்பில் இலிருந்து மனிதனை வெளியேற்றிவிட்டு, சோம்பி இருக்க வைத்து கூலி கொடுப்பது என்பது மிக ஆபத்தான போக்கு. வேளாண்மை செய்வதற்கு ஆட்களே வரவில்லை எனும்போது, வேளாண்மைக்கு என எதற்காக தனி பட்ஜெட். அதனால் என்ன பயன் வரப்போகிறது? அது ஏமாற்று வேலை தானே. நூறு நாள் வேலை திட்டத்தால் என்ன பயன் இருக்கிறது. எத்தனை ஏரிகள் குளங்கள் தமிழ் நாட்டில் தூர் வாரப்பட்டுள்ளன.

நூறு நாள் வேலை திட்டத்தால், எத்தனை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது. அப்படி பயன் இல்லாத திட்டங்கள் எதற்காக? கண்மாய்க் கரையில் அமர்ந்து ஆண்கள் சீட்டு ஆடுகிறார்கள். பெண்கள் பல்லாங் குழி ஆடுகிறார்கள். புரணி பேசுகிறார்கள். கேட்டால் நூறுநாள் வேலை திட்டம் என்கிறார்கள். ஆனால் அதே கிராமத்தில் விவசாய வேலை செய்ய ஆள் கிடைப்பது இல்லை. இதற்கு தண்டமாக ஒரு சம்பளம்.

ஏழ்மையில் உள்ள ஒரு நாட்டில், மக்களை உழைப்பிலிருந்து வெளியேற்றி வேடிக்கை பார்ப்பது என்ன அர்த்தம். நீங்கள் ஊதியமாக 100, 200 ரூபாய் தரலாம். ஆனால், அரிசி, பருப்பு, தக்காளி, வெண்டைக்காய் எங்கிருந்து வரும். வறுமையை போக்க வேண்டும் என்றால் வேளாண்மை செய்ய வேண்டும்” என்று கூறினார் சீமான்.

Leave A Reply

Your email address will not be published.