தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆறு வாரங்களில் முடிவெடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்தும், பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச்செயலாளர் பழனியப்பன் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தில், பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்க வேண்டும் என கூறப்படவில்லை எனவும், சட்டத்தை மீறி தற்காலிக அங்கீகாரம் என்ற கட்டுப்பாடு நடைமுறைப்படுத்துவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, 1994ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில், 1994ம் ஆண்டு அரசாணைக்கு பின் பல அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு விட்டதாகவும், 1994 ஆம் ஆண்டு அரசாணை செயலற்று விட்டதாகவும் வாதிடப்பட்டது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதையடுத்து 1994ம் ஆண்டுக்கு பின் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ஆய்வு செய்த நீதிபதி, பின்னாளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளில் 1994ம் ஆண்டு அரசாணை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை எனவும், இந்த அரசாணையை அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனருக்கு உத்தரவிட்டு, வழக்குகளை முடித்து வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.