திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் மீது மகளிரணி நிர்வாகி புகார்!

டாஸ்மாக் பார் ஏலம் எடுத்துத் தருவதாக ரூ.3 லட்சம் வாங்கிக்கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் மீது திமுக மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் மயிலாடுதுறை எஸ்.பியிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறையில் டாஸ்மாக் பார் ஏலம் எடுத்துத் தருவதாக ரூ.3 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.ஸ்ரீதர் என்பவர் மீது திமுக மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சாந்தி என்பவர் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி சுகுணாசிங்கிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அம்மனுவில், திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்க மாவட்ட தலைவரான ஆர்.எஸ்.ஸ்ரீதர், மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை பார் ஏலத்துக்கு வருவதாகவும், அதனை சாந்திக்கு ஏலம் எடுத்துத்தர ரூ.3 லட்சம் கேட்டதாகவும், அதன்படி கடந்த ஜூலை 1-ஆம் தேதி ஸ்ரீதரின் உதவியாளர் செந்தில் என்பவர் மயிலாடுதுறை மணல்மேடு நடுத்திட்டு கிராமத்தில் உள்ள தனது வீட்டில் வந்து வாங்கிச் சென்றதாகவும், இதுகுறித்து பலமுறை தொடர்ந்து கேட்ட பிறகு கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி பணத்தை திருப்பித்தர முடியாது என்று ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, திமுக மாவட்ட செயலாளர், நகர செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரிடம் முறையிட்டும் பலன் கிடைக்காததால் காவல்துறையினரை அணுகியுள்ள சாந்தி, கட்சித் தலைமை தலையிட்டு தீர்வு பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். டாஸ்மாக் மதுபானக்கடையில் பார் வைக்க தற்போது அனுமதி வழங்கப்படாத நிலையில், டாஸ்மாக் பார் நடத்த திமுகவைச் சேர்ந்த பெண் திமுக பிரமுகரிடமே பணம் கொடுத்து ஏமாந்த சம்பவம் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.