வில்வம் பழத்தின் யோகட் பானத்துக்கான உற்பத்தி உரிம நிகழ்வு.

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் உருவாக்கப்பட்ட வில்வம் பழத்தின் குணநலனைக் கொண்ட யோகட் பானத்துக்கான உற்பத்தி உரிமம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஒக்டோபர் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

வில்வம் பழ யோகட் பானத்தின் கண்டுபிடிப்பாளர் உரிமத்தைக் கொண்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சார்பில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவும், உற்பத்தி உரிமத்தைப் பெற்றுக்கொண்ட முல்லை பால் பொருள் உற்பத்தி நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் சி.தவசீலனும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது யாழ் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி கலாநிதி சீ.வசந்தருபா, பயிரியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும், தொழில் நுட்ப பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் திருமதி சி. சிவச்சந்திரன், வணிக இணைப்பு அலகின் (University Business Linkage Cell of University of Jaffna – ‘UBL JAFFNA) பணிப்பாளர் கலாநிதி த.ஈஸ்வரமோகன், சட்டத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான திருமதி துஷானி சயந்தன், பல்கலைக் கழக நிதியாளர் கே. சுரேஸ்குமார், முல்லை பால் உற்பத்தி நிறுவன ஆலோசனை சபை உறுப்பினர் பேராசிரியர் எஸ். கணேஷ்ராஜா, யோகட்
பான கண்டுபிடிப்பாளர் சே.ஆனந்த்குமார் மற்றும் அவரது குழுவினரும் கலந்து கொண்டனர்.

இந்த யோகட் பானத்தை இயற்கையான வில்வம் பழ பாணியில் இருந்து முல்லைத்தீவில் அமைந்துள்ள முல்லை பால் பொருள் உற்பத்தி நிறுவனம் வர்த்தக ரீதியில் தயாரிக்க உள்ளது. இது வயிற்றுப்புண் மற்றும் நீரிழிவு நோயை குறைக்க உதவுவதுடன் புற்றுநோய், கிருமி தாக்கம், மூட்டுவலி மற்றும் பல நோய்களுக்கான தீர்வைக் கொண்டுள்ளது என்றும், இந்தக் கூட்டு முயற்சியானது உள்ளூர் உற்பத்திகளையும், உற்பத்தியாளர்களையும் ஊக்குவிப்பதற்கான ஒரு முன்னெடுப்பாக அமையும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.