அரசின் 11 பங்காளிகளும் கொழும்பில் மைத்திரி தலைமையில் முக்கிய பேச்சு!

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையம் உட்பட தேசிய வளங்களைப் பாதுகாப்பது தொடர்பான முக்கியத்துவமிக்க கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அரசுக்கு ஆதரவு வழங்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். அத்துடன், துறைமுகம், மின்சாரம் மற்றும் எரிபொருள்சார் துறைகளின் தொழிற்சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கும் முடிவு பாரதூரமானது எனச் சுட்டிக்காட்டிய தொழிற்சங்கப் பிரமுகர்கள், இதைத் தடுப்பதற்கு பங்காளிக் கட்சிகள் தலையீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்குப் பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. அத்துடன், தேசிய வளங்களைப் பாதுகாப்பதற்கு முன்னின்று செயற்படுவதாகவும் அறிவித்துள்ளன.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,

“தேசிய வளங்கள் என்பது தேசிய பாதுகாப்பின் ஓர் அங்கமாகும். எனவே, அவை விற்பனை செய்யப்படக்கூடாது. இந்த நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம். வேறு நபர்கள் மாறுபட்ட நிலைப்பாட்டில் இருக்கலாம்” – என்றார்.

அதேவேளை, “இது அரசுக்கு எதிரான சந்திப்பு அல்ல. நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பான கலந்துரையாடலாகும்” என்று சந்திப்பின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.