மசினகுடி மற்றும் சிங்காரா வனப்பகுதியில் புலி அச்சத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கிராம மக்கள்

மசினகுடி மற்றும் சிங்காரா வனப்பகுதியில் புலி அச்சத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கிராம மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடமுடியாமல் தவித்து வருகின்றனர்.

மசினக்குடி மற்றும் சிங்காரா வனப்பகுதியை ஒட்டி 10 ற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு இருக்க கூடிய கிராம மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது கால்நடை வளர்ப்பாகும். குறிப்பாக இங்கு வாழக்கூடிய பழங்குடி இன மக்கள் கால்நடைகளை மேய்ப்பதையே தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். கடந்த 1970 களில் எம்ஜிஆர் ஆட்சியின் போது தமிழகத்திலேயே அதிக பால் உற்பத்தியை தந்து விருது பெற்றது இங்கு செயல்படும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம்.

முதுமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு இந்த பகுதியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் ஏராளம் இருந்தன. முதுமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு இப்பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது. நாட்கள் செல்ல செல்ல கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களின் அளவும் குறையத் துவங்கியது. இருப்பினும் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் தங்களது கால்நடைகளை வனத்தை ஒட்டிய பகுதிகளிலும், வனத்திற்குள்ளும் மேய்ச்சலுக்கு விட்டு வாழ்க்கை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தான் T23 புலி மசினகுடி பகுதியிலுள்ள விவசாயிகளின் வாழ்க்கையை திருப்பி போட்டு இருக்கிறது. இங்குள்ள குரும்பர்பாடி பகுதியை சேர்ந்த கௌரி என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மசினகுடி, கல்குவாரி பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது புலி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் இழப்பை தொடர்ந்து 10 ற்கும் மேற்பட்ட மாடுகள் புலியால் தாக்கி கொல்லப்பட்டது. அப்போது முதலே வனப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் சென்று மாடுகளை மேய்ப்பதற்கு அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

வனத்துறையினரால், மனிதர்கள் மற்றும் கால்நடைகளை கொல்லும் புலியை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, கிராம மக்கள் அச்சத்திற்கும் மத்தியில் கால்நடைகளை மேய்த்து வந்தனர். இந்த நிலையில்தான் கடந்த 1ஆம் தேதி அதே குறும்பர்பாடி பகுதியை சேர்ந்த மங்கல பஸ்வன் என்பவர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது புலி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் நடைபெற்று ஏழு நாட்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது வரை புலியை பிடிக்க முடியாமல் வனத்துறை திணறி வருகிறது. அதேநேரம் புலி இருவரும் கொல்லப்பட்ட அதே வனப்பகுதியில் சுற்றி திரிவதால், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடமுடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். புலியை பிடிக்கும் வரை வனத்தை ஒட்டிய பகுதிகளுக்கு யாரும் மேய்ச்சலுக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையும் அறிவுறுத்தி இருக்கிறது. இதன் காரணமாக பலர் மாடு மேய்ச்சலுக்கு செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இருப்பினும் வேறு வழியின்றி மாடுகளை மேய்ச்சலுக்கு விட செல்லும் மக்கள் புலி எப்போது வந்து தங்களை தாக்கும் என்ற அச்சத்திலேயே உள்ளனர்.

தங்களிடம் உள்ள நாட்டு மாடுகள் குறைந்தது 2 லிட்டர் பால் கறக்கும் ஆனால் தற்போது போதிய உணவு இல்லாததால் 1லிட்டருக்கு குறைவாகவே கறப்பதால் மிகுந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கும் இம்மக்கள் சுற்றுலா தொழிலும் இந்த புலியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். எனவே வனத்துறை விரைந்து புலியை பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.