கேரளாவில் 11 ஆண்டுகளாக படுத்த படுக்கை … மனத் துணிவால் பல கோடிகளுக்கு அதிபதி

இந்திய மாநிலம் கேரளாவில் 11 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கும் ஒருவர் பல கோடிகள் மதிப்பிலான வியாபாரம் செய்து வருவது பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஷானவாஸ். 11 ஆண்டுகளுக்கு முன்னர் விபத்து ஒன்றில் சிக்கி கழுத்துக்கு கீழே ஸ்தம்பித்துப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

மர வியாபாரியான ஷானவாஸ் 2010 மே மாதம் அதிகாலையில் வாகன விபத்தில் சிக்கினார். தொழில் நிமித்தம் பயணம் மேற்கொண்டு தமது வாகனத்தில் குடியிருப்புக்கு திரும்பும் வழியில் விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை என்பதாலையே, பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார் ஷானவாஸ். அவருடன் பயணப்பட்ட இரு லொறி சாரதிகளும் துரிதமாக செயல்பட்டு, அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் காயம் பலமாக இருப்பதால் சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்ததுடன், அறுவை சிகிச்சை ஆபத்தாக முடியும் எனவும் எச்சரித்துள்ளனர்.

சுமார் நான்கரை மாதங்கள் அங்கே அவசர சிகிச்சை பிரிவில் இருந்துள்ளார். தொடர்ந்து இன்னொரு மருத்துவமனையில் 5 மாதங்கள் சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பின்னரே, தமது கழுத்தை அசைக்க முடிந்தது என்கிறார் ஷானவாஸ்.

இதனிடையே சேமிப்பு மொத்தமும் மருத்துவ செலவுக்காக கரைய, தெரிந்த தொழிலை முன்னெடுத்து செல்வதே தமது குடும்பத்திற்கு இனி தம்மால் அளிக்க முடிந்த உதவி என ஷானவாஸ் புரிந்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனை படுக்கையில் இருந்தே மர வியாபாரத்தை முன்னெடுத்துள்ளார். மனைவியின் நகைகளை அடகு வைத்து ஒரு லட்சம் திரட்டிய ஷானவாஸ், அந்த தொகையில் சிறிய அளவில் மர வியாபாரத்தை துவங்கியுள்ளார்.

இதனிடையே, மருத்துவமனையில் சேர்ப்பித்த 5வது மாதத்தின் இறுதியில் குடியிருப்புக்கு திரும்பிய ஷானவாஸ் குடும்பம், அதன் பின்னர் படிப்படியாக தமது தொழிலை முன்னெடுத்து சென்றதாக தெரிவித்துள்ளார்.

தற்போது இறக்குமதி செய்த மரங்களையே ஷானவாஸ் விற்பனை செய்து வருகிறார். இப்போது இரண்டு இடங்களில் கடை திறந்துள்ள ஷானவாஸ், சுமார் 20 தொழிலாளர்களையும் வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

கண்காணிப்பு கெமரா மற்றும் ஆப்பிள் ஏர்பாட் மூலமே தமது வாடிக்கையாளர்களிடம் தொடர்பு கொள்கிறார். இரு மகள்கள் மற்றும் மனைவியின் உதவியுடன், தற்போது பல கோடிகள் மதிப்பிலான மர வியாபாரத்தை முன்னெடுத்து வருகிறார் ஷானவாஸ்.

Leave A Reply

Your email address will not be published.