சகல மக்களையும் ஒடுக்குகிறது அரசு – சஜித் குற்றச்சாட்டு.

“பொருளாதாரத்தில் அதிசயங்களைச் செய்யக்கூடிய ஏழு மூளைகளைக் கொண்ட ஒருவர் இருக்கின்றார் எனப் பெருமை பேசிய அரசு, முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது அனைத்து மக்களையும் ஒடுக்குகின்றது. இன்று கிராமம் கிராமமாக, வீடு வீடாக பொருளாதார நெருக்கடியின் வேதனையில் மக்கள் உள்ளனர். அந்த 7 மூளைகளைக்கொண்ட நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இப்போது எங்கே?”

– இவ்வாறு கேள்வி எழுப்பினார் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ.

கெஸ்பேவ நகரத்தில் இன்று (15) ‘விருப்பப்படி ஆட்சியாளர்கள் – பட்டினியில் மக்கள்’ என்னும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசு எந்தவிதக் கவனத்தையும் செலுத்தவில்லை. நாட்டில் நண்பர்கள் கும்பல் மற்றும் பாரிய அளவிலான மாபியாக்கள் செயற்படுகின்றன.

அரசு நாளுக்கு நாள் மக்களை ஒடுக்கிக் கொண்டே செல்லுகின்றது. சிவில் உரிமைகள், பொருளாதார உரிமைகள், அரசியல் உரிமைகள் மற்றும் கலாசார உரிமைகள் உட்பட அனைத்து உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

மாறாக, மக்களுக்கு அசௌகரியத்தையும் வறுமையால் வாட்டுவதையுமே அரசு இன்று செய்கின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.