அதிகாரத்தின் பெயரால் ஆசிரியர்களையும் அரச ஊழியர்களையும் அவமதிக்காதீர்கள்!

“கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி திறக்கவுள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் வராத பட்சத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களைக் கொண்டு பாடசாலைகளை நடத்துவேன் என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார் என்று இன்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்து வருத்தமடைகின்றேன். அதிகாரத்தின் பெயரால் ஆசிரியர்களையும் அரச ஊழியர்களையும் அவமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.”

இவ்வாறு வடக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வி அமைச்சரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணைச் செயலாளருமான கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாறு:-

“அதிபர்கள், ஆசிரியர்கள் தமது சம்பள முரண்பாட்டுக்கான தீர்வைக் கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் நியாயங்களை அரசும் ஏற்றுக்கொண்டு தீர்வு வழங்குவதாகக் கூறியுள்ளது. எனினும், அரசின் திட்டவட்டமான பொறுப்புக்கூறல் இன்மை காரணமாக வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கின்றது. இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சு 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட ஆரம்பப் பாடசாலைகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் திறப்பதற்கு தீர்மானித்துள்ளது. எனினும், இந்தப் போராட்டத்துக்கு முடிவு காணாமல் பாடசாலைகள் திறக்கப்படக்கூடாது என அதிபர், ஆசிரியர் சங்கங்கள் கோரி வருகின்றன.

இந்நிலையில், இந்தப் பிரச்சினையானது சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களும் மத்திய கல்வி அமைச்சரும் இணைந்து தீர்மானித்து செயற்படுத்த வேண்டிய விடயமாகும். அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கையைக் கருத்தில் எடுக்காமல் பாடசாலை ஆரம்பிக்கின்ற தீர்மானத்தை ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்துவதாயின், அவை மாகாண கல்வி அமைச்சின் ஊடாக செயற்படுத்த வேண்டிய விடயங்களாகும்.

அதிபர், ஆசிரியர்களின் போராட்டங்கள் பற்றி மக்கள் அனைவரும் அறிவர். மேலும், கொரோனாத் தொற்று அச்சம் காரணமாக பெற்றோர் முதல் நாளே தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்ப விரும்ப மாட்டார்கள். மாணவர் வரவு படிப்படியான ஒன்றாகவே அமையும். நிலைமை இவ்வாறிருக்க, எதிர்வரும் 21ஆம் திகதி வருகின்ற மாணவர்களை வரவேற்பதற்கு ஆசிரியர்கள் வராவிட்டால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அனுப்பி ஆசிரியர்களுக்குப் பதிலாக பாடசாலையை நடத்துவேன் என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் விடுத்திருக்கும் அறிக்கையானது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிக்கின்றது. காரணம் 21ஆம் திகதியும் போராட்டம் தொடருமானால் அடுத்த நடவடிக்கையைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மாகாண ஆளுநருக்கும், மாகாண கல்வி அமைச்சுக்குமே உரியது. ஆகவே, கிளிநொச்சி மாவட்ட செயலாளரின் அறிக்கையானது அவர் தனது அதிகார வரம்புக்கு அப்பால் செல்கின்றாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களைத் தற்காலிகமாக ஆசிரியர்களாகப் பயன்படுத்துவேன் என அவர் கூறியிருப்பதானது, ஒருபுறம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை வேலையின்றி சம்பளம் எடுக்கின்ற அலுவலர்களாகச் சிறுமைப்படுத்துகின்ற செயற்பாடாக அமைவதுடன் மறுபுறம் யார் வேண்டுமானாலும் ஆசிரியர் பணியைச் செய்யலாம் என்ற தோரணை வெளிப்படுவதானது ஆசிரியர் தொழிலையும் சிறுமைப்படுத்துவதாக அமைகின்றது.

இவற்றுக்கு மேலாக மாவட்ட செயலரின் முடிவானது ஆசிரியர்களையும் நிர்வாக உத்தியோகத்தர்களான பிரதேச செயலர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் மோத விடுகின்ற தவறான அணுகுறை என்பதை கற்றறிந்த அனுபவமிக்க மாவட்ட செயலாளர் புரிந்துகொள்ளத் தவறியமை கவலையளிக்கின்றது” – என்றுள்ளது

Leave A Reply

Your email address will not be published.