நிமலராஜனின் 21 ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல்.

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 21 ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் (19) அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாலை தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.

இந் நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், மகளிா் அணித் தலைவி திருமதி. வாசுகி சுதாகரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளா்கள் கலந்து கொண்டனா்

போர் சூழலில் யாழிலிருந்து, துணிவாக ஊடகப்பணியாற்றிய இவர், பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை, வீரகேசரி, ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார்.

இந்நிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தவேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஈபிடிபி துணை இராணுவக்குழுவின் ஆயுததாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

அதன்போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார்.

கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர், வீட்டின் மீது கைக் குண்டுத்தாக்குதலையும் மேற்கொண்டனர்.

இதன்போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம், தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.