வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளில் மிகக் கன மழை தொடரும்.

தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை எதிர்வரும் 13.11.2021 வரை தொடரும். தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் தோன்றியுள்ள தாழமுக்கம் நாளை (09.11.2021) முதல் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 10.11.2021 முதல் 12.11.2021 வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளில் மிகக் கன மழை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. குறிப்பாக கரையோரப் பகுதிகளில் மிகக் கனமான மழை கிடைக்க வாய்ப்புள்ளது. இத்தாழமுக்கம் மிகத் தீவிரமான தாழமுக்கமாகவே (சிலவேளைகளில் இதன் வளர்ச்சியைப் பொறுத்து இது புயலாக கூட வலுப்பெறலாம்) இந்தியாவின் தமிழ்நாட்டிலேயே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் வேகமான காற்று, மிகக் கனமழை என எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கும் இதன் பாதிப்பு கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக எதிர்வரும் 10ம், 11ம் மற்றும் 12ம் திகதிகளில் 150மி.மீ. க்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எதிர்வரும் 10.11.2021 அன்று 80ம.மீ. க்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ச்சியாக தற்போது மழை கிடைத்து வருவதால் நிலம் நிரம்பு நிலையை அடைந்துள்ளதனால் எதிர்வரும் நாட்களில் கிடைக்கவிருக்கும் கனமழை தாழ்வான பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தை உருவாக்கலாம். எனவே மக்கள் அவதானமாக இருப்பது அவசியமாகும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது நன்று.

Leave A Reply

Your email address will not be published.