எனது பணியை சிறப்பாக செய்துள்ளேன் – ரவி சாஸ்திரி.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துடனான தோல்வி இதற்கு காரணமாகிவிட்டது.

இந்த உலகக்கோப்பை தொடர் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவருக்குமே மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் இந்த தொடருடன் விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார். இதே போல இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலமும் முடிவடைகிறது. இதுவரை ஒரு ஐசிசி கோப்பை கூட வென்றுக் கொடுக்காததால் அவரின் பதவிக்காலத்தை நீட்டிக்க பிசிசிஐ முன் வரவில்லை

இந்நிலையில் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகும் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில், “இந்திய அணியுடனான இந்த பயணம் சிறப்பாக இருந்தது. இந்த பணியை நான் தேர்வு செய்த போது, ஏதேனும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். அதனை செய்துள்ளேன் என நினைக்கிறேன்.

வாழ்கையில் சில நேரங்களில் எதனை நாம் சாதித்தோம் என்பது முக்கியமில்லை. எவற்றையெல்லாம் கடந்து வந்துள்ளோம் என்பது தான் முக்கியமாக இருக்கும். அந்த வகையில் இந்திய வீரர்கள் கடந்த 5 ஆண்டுகளில் பல இன்னல்களை கடந்து வந்துள்ளனர். இந்திய வீரர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று வெற்றிகளை குவித்துள்ளனர். அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சாதித்துள்ளனர்.

கிரிக்கெட்டில் தலைசிறந்த அணியாக இந்தியா உருவெடுத்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து துரதிஷ்டவசமாக வெளியேறிவிட்டோம். ஆனால் பெரிய அணிக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. என்னைப்பொறுத்தவரை ஐபிஎல் தொடருக்கும், டி20 உலகக்கோப்பைக்கும் சிறிது இடைவெளி இருந்திருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.