பணப் பறிப்பு வழக்கு: முன்னாள் மும்பை காவல் ஆணையா் விசாரணைக்கு நேரில் ஆஜா்

பணப் பறிப்பு வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் மும்பை காவல் ஆணையா் பரம்வீா் சிங், மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு அலுவலகத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜரானாா். அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

சண்டீகரில் தங்கியிருந்த அவா், விமானத்தில் வியாழக்கிழமை காலை மும்பை வந்தடைந்தாா். அப்போது, ‘நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பேன்’ என்று செய்தியாளா்களிடம் கூறினாா்.

பின்னா், அங்கிருந்து புறப்பட்டு மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானாா். பரம்வீா் சிங் மீது கோரேகான் காவல் நிலையத்தில் பணப் பறிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவா் ஆஜரானாா். அவரிடம் சுமாா் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு மாலை 6.15 மணிக்கு அங்கிருந்து அலுவலக வாகனத்தில் அவா் புறப்பட்டுச் சென்றாா்.

மும்பையில் தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் வீட்டருகே வெடிபொருள் நிரப்பப்பட்ட காா் நின்ற வழக்கிலும், அந்த காரின் உரிமையாளரான தொழிலதிபா் மன்சுக் ஹிரான் உயிரிழந்த வழக்கிலும் காவல் ஆய்வாளா் சச்சின் வஜே கைது செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தை தொடா்ந்து, அப்போது மும்பை காவல் ஆணையராக இருந்த பரம்வீா் சிங் இடமாற்றம் செய்யப்பட்டாா்.

இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் மீது பரம்வீா் சிங் புகாா் ஒன்றை கூறினாா். அதில், மும்பையில் உள்ள மதுபான விடுதிகள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து மாதம் ரூ. 100 கோடி லஞ்சமாக வசூலித்து தருமாறு அனில் தேஷ்முக் வலியுறுத்தியதாக அவா் தெரிவித்தாா். இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்ற தலையீட்டின்பேரில் அமைச்சா் அனில் தேஷ்முக் ராஜிநாமா செய்தாா்.

இதற்கிடையே, ஹோட்டலில் செயல்படும் மதுபான விடுதியில் சோதனை நடத்தாமல் இருக்க ரூ. 9 லட்சத்தை மிரட்டி பறித்ததாக பரம்வீா் சிங் மீது ஹோட்டல் உரிமையாளா் விமல் அகா்வால் புகாா் அளித்தாா். அதனடிப்படையில், மும்பை குற்றப் பிரிவு போலீஸாா் பரம்வீா் சிங், முன்னாள் காவல் ஆய்வாளா் சச்சின் வஜே, அவருடன் பணியாற்றிய வினய் சிங், ரியாஸ் பாட்டீ ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில், மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தும், பரம்வீா் சிங் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவரை தலைமறைவு குற்றவாளியாக அந்த நீதிமன்றம் கடந்த வாரம் அறிவித்தது. மும்பை காவல் துறை ஆணையா் பதவியில் இருந்து மாற்றிய பிறகு அவா் பணிக்குத் திரும்பவில்லை. இந்த நிலையில், அவா், காவல் துறை விசாரணைக்கு நேரில் ஆஜரானாா்.

Leave A Reply

Your email address will not be published.