பென்சில் திருடிய சக மாணவன் – போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற 2ம் வகுப்பு சிறுவன்

பள்ளிக்கூடத்தில் தன்னுடைய பென்சிலை திருடி விட்டான் என்று சக மாணவனை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற 2ஆம் வகுப்பு மாணவனின் செயல் பர்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெத்தகடுவூரை சேர்ந்த ஹனுமந்த் என்ற சிறுவன் அதே ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறான். இதனிடையே சக மாணவன் ஒருவன் உட்பட மேலும் சில மாணவர்களை அழைத்துக்கொண்டு அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்ற ஹனுமந்த் ஒரு மாணவன் மீது இவன் என்னுடைய பென்சிலை திருடி விட்டான் என்று போலீசாரிடம் புகார் கூறினான்.

இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவனின் செய்கையை பார்த்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த போலீசார் புகார் கூறிய மாணவனை சமாதானம் செய்து அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் மாணவன் ஹனுமந்த் என்னுடைய பென்சிலை திருடியவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் கூறினான்.

வழக்குப்பதிவு செய்தால் பின்னர் நீதிமன்றம், ஜாமீன் என்று உன்னுடைய பென்சிலை திருடிய மாணவனின் பெற்றோர் அலைய நேரிடும் என்று போலீசார் கூறினர். அதற்கு தேவைப்பட்டால் அவனுடைய பெற்றோர்களிடம் இது பற்றி கூறுகிறேன் என்று ஹனுமந்த் போலீசாரிடம் கூறியுள்ளான்.

இதைத்தொடர்ந்து, இரண்டு பேரையும் சமாதானம் செய்த போலீசார் திருடிய பென்சிலை காண்பிக்கும்படி கேட்டனர். அப்போது மாணவன் ஹனுமந்த் ஒன்றரை அங்குலம் நீளமுள்ள ஒரு பென்சில் துண்டை போலீசாரிடம் காண்பித்து இந்தப் பென்சிலை தான் இவன் திருடி விட்டான் என்று கூறினான்.

Leave A Reply

Your email address will not be published.