வீரசேகர:டக்ளஸ் , செயலாளர்கள் புலிகளது தங்கத்தை தோண்ட முற்பட்டு சிக்கிக் கொண்டனர்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த தங்கத்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் மீட்பதற்கு முன்னர் அதனை மீட்க முயற்சித்த அமைச்சர்கள் இருவரின் செயலாளர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இரண்டு கேபினட் அமைச்சர்களின் , இரண்டு செயலாளர்கள் மீது குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் தொடர்பில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் இந்த மாதம் 25ஆம் திகதி அகழ்வுப் பணிகள் நடைபெறவிருந்தன. எவ்வாறாயினும், மகாவீரர் நினைவேந்தல் காரணமாக அகழ்வு பணிகள் டிசம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

இதேவேளை, பொது பாதுகாப்பு அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும், கடற்றொழில் அமைச்சரின் செயலாளரும் கடந்த 23ஆம் திகதி புதுக்குடியிருப்பில் உள்ள பொலிஸ் பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று அவர்கள் திட்டமிட்டிருந்த அகழ்வுக்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருப்பதாகவும் , அதை 25ம் திகதிக்கு முன் அகழ்வை இரகசியமாக செய்ய உதவுமாறும் பொலிஸ் பொறுப்பதிகாரியை நிர்ப்பந்தித்துள்ளார்கள். . ஆனால், அந்த கோரிக்கையை பொலிஸ் பொறுப்பதிகாரி நிராகரித்துள்ளார்.

இரு அமைச்சுக்களின் செயலாளர்கள் இருவரும் வருகை தந்ததாக சில நாட்கள் கழித்து முல்லைத்தீவு பிரிவுக்கு பொறுப்பான எஸ்.எஸ்.பிக்கு தகவல் கிடைக்கும் வரை புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவிக்காது இருந்துள்ளார் . இது தொடர்பில் முல்லைத்தீவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லசந்த விதாரண தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரையின் பேரிலேயே புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி , அங்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அமைச்சின் செயலாளர்கள் இருவர் தங்கம் சேகரிக்கச் சென்றமை தொடர்பில் வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார நேற்று (30) பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.