சுதந்திரத்துக்கும் கம்யூனிசத்துக்கும் எதிரான மோதலா? – சிலி மக்கள் முன்னுள்ள கேள்வி : சுவிசிலிருந்து சண் தவராஜா

சிலி நாட்டில் நடைபெற்றுமுடிந்த அரசுத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட எந்தவொரு வேட்பாளரும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிராத நிலையில் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. நவம்பர் 20ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இவர்களுள் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற இருவரும் டிசம்பர் 19ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்டத் தேர்தலில் மோதவுள்ளனர்.

நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் சிலி நாட்டுச் சமூகம் எவ்வாறு பிளவுண்டு கிடக்கின்றது என்பதையும், நாட்டு மக்கள் எத்துணை தூரம் அரசியல் நடவடிக்கைகளில் வெறுப்படைந்து உள்ளார்கள் என்பதையும் காட்டுவதாக உள்ளன.

சிலி நாட்டில் வாக்களிக்கத் தகுதியான 15 மில்லியன் மக்கள் உள்ளனர். இவர்களுள் 7 மில்லியன் மக்கள் மாத்திரமே நடைபெற்று முடிந்த அரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்திருந்தனர். இது வாக்களிக்கத் தகுதியான மக்கட்தொகையில் 46.7 விழுக்காடு ஆகும். அகஸ்டஸ் பினாசேயின் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் உருவான தேர்தல்கள் மீதான மக்களின் வெறுப்பு இன்றுவரை தொடர்கதையாகவே உள்ளது. மொத்த மக்கட்தொகையில் 50 விழுக்காட்டுக்கும் குறைவான மக்கள் வாக்களித்துள்ள நிலையில் அந்த வாக்களிப்பின் முடிவுகள் தார்மீக அடிப்படையில் ஏற்றுக்கொள்ளத் தக்கவைதானா என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.

தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தீவிர வலதுசாரி வேட்பாளரான ஜோசே அன்ரோனியோ காஸ்ற் 27.91 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 1,961,122 ஆகும். மொத்த வாக்காளர் தொகையோடு ஒப்பிடுகையில் இது வெறும் 13 வீதம் மாத்திரமே.

மறுபுறம், இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள தீவிர இடதுசாரியான கப்ரியேல் போரிக் 25.83 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 1,814,809 ஆகும். மொத்த வாக்காளர் தொகையோடு ஒப்பிடுகையில் இவர் பெற்ற வாக்குகள் 12.1 விழுக்காடு ஆகும்.

7 பேர் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் மீதி ஐவரும் அளிக்கப்பட்ட வாக்குகளில் 46 வீதத்தைத் தங்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
மேற்குலகின் விருப்புக்குரிய நபரான காஸ்ற் தற்போதைய நிலையில் போட்டியில் முன்னிலை வகித்தாலும், இரண்டாவது சுற்றில் அவர் இலகுவான வெற்றியைப் பெறுவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. Wehrmacht எனப்படும் நாசிப்படையின் உறுப்பினராக கிழக்கு முனையில் சண்டையிட்டவரின் மகனாக அறியப்படும் 55 வயது நிரம்பிய காஸ்ற், சர்வாதிகாரி பினோசற்றின் ஆட்சிமுறைமையை வெளிப்படையாகப் பாராட்டும் ஒருவராக உள்ளார்.

பழைமைவாதக் கருத்துக்களைக் கொண்ட இவர், அகதிகளுக்கு எதிரான கொள்கைகைளைக் கொண்டவர். படைத்துறையின் உதவியுடன் இறுக்கமான ஒரு ஆட்சிமுறையை வலியுறுத்தும் இவர் திறந்த பொருளாதாரக் கொள்கையை ஆதரிப்பவராக உள்ளார். இதனால், பெரு வணிகர்களதும், ஆயுதப் படைகளதும் ஆதரவு இவருக்கு உள்ளது.
இவருக்கு நேர் எதிரான கருத்துக்களைக் கொண்ட போரிக், 2011 இல் நடைபெற்ற கல்வி உரிமைகளுக்கான போராட்டங்களின் போது ஒரு பல்கலைக்கழக மாணவர் தலைவராக அரசியல் பிரவேசத்தை மேற்கொண்டவர்.

35 வயது நிரம்பியவரான இவர் அரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டால், சிலியின் வரலாற்றில் மிக இளவயதில் அரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்படும் பெருமையைப் பெறுவார். முற்போக்குக் கருத்துகளுக்குச் சொந்தக்காரரான இவர் பெண் சமத்துவம், சூழல் பாதுகாப்பு, கல்விச் சமத்துவம் போன்ற கொள்கைகளைக் கொண்டவர்.

ஸ்பெயின் நாட்டின் முன்னாள் காலனித்துவ நாடான சிலியில் ஸ்பெயின் நாட்டு அரசியலின் எதிரொலி தொடர்ந்தும் இருந்துகொண்டே வருகின்றது. தற்போது நடைபெற்றுமுடிந்த தேர்தலில் கூட ஸ்பெயின் நாட்டுக் கட்சிகள் முன்னணி வேட்பாளர்களுக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தத் தவறவில்லை.

ஸ்பெயின் நாட்டு வலதுசாரிக் கட்சியான வொக்ஸ் (மக்கள் கட்சி) தனது ஆதரவை காஸ்ற்றுக்குத் தெரிவித்துள்ளது. பாசிசக் கொள்கைகளை உடைய ஸ்பெயின் மக்கள் கட்சி, பிரேசில் நாட்டு அரசுத் தலைவரான ஜாயர் பொல்சனாரோ ஆகியோர் உள்ளிட்டோர் இணைந்து உருவாக்கியுள்ள கம்யூனிசத்துக்கு எதிரான அணியான ~மட்ரிட் போரம்| அமைப்போடு நெருங்கிய தொடர்பை உடையவர் காஸ்ற்.

போரிக்கைப் பொறுத்தவரை அவர் ஸ்பெயினின் ஆளுங் கட்சிகளுள் ஒன்றான பொடமோஸ் (எம்மால் முடியும்) கட்சியுடன் உறவுகளைப் பேணி வருகின்றார். இக்கட்சி இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டது.

போரிக் வெற்றிபெறும் பட்சத்தில் அவர் கொண்டுவரக் கூடிய தீவிர இடதுசாரித் திட்டங்கள் நாட்டைக் கம்யூனிசப் பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கும் காஸ்ற், டிசம்பர் 19இல் நடைபெறவுள்ள தேர்தல் “சுதந்திரத்துக்கும் கம்யூனிசத்துக்கும் எதிரான மோதல்” என்கிறார்.
காஸ்ற் வெற்றிபெறும் பட்சத்தில் அவர் அமுல்படுத்தக்கூடிய பினாசே பாணியிலான சட்டங்கள் நாட்டை மீண்டுமொரு சர்வாதிகார யுகத்திற்கு இட்டுச்செல்லும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கும் போரிக், நடைபெறவுள்ள தேர்தல் “ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் எதிரான மோதல்” என்கிறார்.

இருவரது கருத்துக்களும் அவர்களது ஆதரவாளர்களை ஈர்ப்பதற்கு உதவலாம். ஆனால், அவர்களுக்கு வாக்களிக்காத, மாற்று வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களின் வாக்குகளை ஈர்ப்பதற்கு உதவுமா என்பதே கேள்வி. ஏனெனில், நடைபெறவுள்ள இரண்டாவது சுற்றுத் தேர்தலின் முடிவுகளைத் தீர்மானிப்பவர்கள் அவர்களே.

சற்றொப்ப 18.5 மில்லியன் மக்கள் வாழும் சிலி நாட்டின் ஒரு வீதமானோர் அந்த நாட்டின் மொத்தச் செல்வத்தில் 25 வீதத்தைத் தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள் என்கிறது ‘லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியப் பிராந்தியங்களுக்கான பொருளாதார ஆணையம்’.

மீதி உயர்நிலையில் உள்ள 10 வீதமானோரிடம் நாட்டின் மூன்றில் இரண்டு மடங்கு செல்வம் உள்ளது. கீழ்நிலையில் உள்ள 18 மில்லியன் மக்களிடம் உள்ள செல்வமோ வெறும் 2.1 விழுக்காடு மாத்திரமே. காஸ்ற் வெற்றிபெற்றால் இந்தப் படிநிலையில் மேலே உள்ள செல்வந்தர்களின் நலன்களைப் பேணவே முயற்சி செய்வார் என்பது உறுதி.

ஆனால், போரிக் வெற்றிபெற்றால் படிநிலையில் கீழே உள்ள மக்களின் நலன் பேணும் ஒருவராக இருப்பார் எனலாம். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு மக்கள் வாக்களிப்பார்களேயானால் சிலியில் மீண்டும் ஒரு இடதுசாரி ஆட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு ஒரு நிலை உருவாகுமாக இருந்தால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகு அதனை அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியே.

1973இல் சல்வடோர் அலண்டே ஆட்சி கவிழ்க்கப்பட்டு சர்வாதிகாரி அகஸ்டஸ் பினாசே எவ்வாறு பதவியில் அமர்த்தப்பட்டாரோ, அவ்வாறான ஒரு வரலாறு மீண்டும் படைக்கப்படுமா என்பது தேர்தல் முடிவுகளைப் பொறுத்ததே.

Leave A Reply

Your email address will not be published.