ராணுவ ஹெலிகாப்டர் விபத்து முப்படைத் தளபதியின் கதி?

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படும் விமானப் படை ஹெலிகாப்டர் புதன்கிழமை விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் பயணித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெலிங்டன் ராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த ஹெலிகாப்டரில் ஒன்று குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது.

விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி உறுதியாகத் தெரியவில்லை.

நஞ்சப்ப சத்திரம் அருகே ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் மீட்பு பணியில் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரியில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக நீலகிரி ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டரில் 14 பேர் வரை பயணம் செய்ததாகவும், அதில் பயணம் செய்த 4 ராணுவ உயரதிகாரிகளின் நிலை என்னவானது என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

பகல் 1.43 மணி நிலவரம்: முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவருடன் ராணுவ அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பயணித்த எம்ஐ-வகை ராணுவ ஹெலிகாப்டர் தமிழகத்தில் கோவை அருகே விபத்துக்குள்ளானதாகவும், விபத்து நடந்த இடத்தில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.