ஓடும் அரசுப் பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகள்… வாழ்நாள் முழுவதும் பயணம் இலவசம் என அரசு அறிவிப்பு

ஓடும் பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது.

பெண்களின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதற்கென மத்தியில் தனி அமைச்சரவையே செயல்பட்டு வருகிறது.

மாவட்ட அளவிலும் பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சுவாரசியமான, பாராட்டும் விதமான சம்பவம் தெலங்கானாவில் நடந்திருக்கிறது.

இங்கு பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஓடும் பேருந்தில் பிறந்த இவர்களுக்கு, பிறந்த நாள் பரிசாக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இரு குழந்தைகளில் முதலாமவர், கடந்த மாதம் 30-ம்தேதி நாகர் கர்னூல் டெப்போவுக்கு உட்பட்ட பெத்தகோதபள்ளி கிராமத்தில் பிறந்துள்ளது. இன்னொரு குழந்தை ஆசிபாபாத் டெப்போவுக்கு உட்பட்ட சித்திபேட்டில் பிறந்துள்ளது.

இதன் தாய்மார்கள் இருவரும், பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது பேருந்திலேயே அவர்களுக்கு வலி அதிகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, போக்குவரத்து பணியாளர்களும், பொதுமக்களும் பிள்ளையை பாதுகாப்பாக பெற்றெடுக்க உதவி செய்தனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தாயும் சேயும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தற்போது அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.