ஐந்தாம் ஆண்டு பரீட்சையில் சித்தி பெற்ற பிள்ளைகளுக்கு புலமைபரிசில்…

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 9000 பிள்ளைகளுக்கு பிரதமரின் தலைமையில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையினால் புலமைப்பரிசில்….

இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபை உறுப்பினர்களின் பிள்ளைகள் 9000 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் முதலாம் கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களது தலைமையில் இன்று (09) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

முதலாவது கட்டத்தின் கீழ் 6000 பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்காக மக்கள் வங்கியில் சிசு உதான கணக்கினை திறப்பதற்கான 89,820,000 ரூபாய் பெறுமதியான காசோலை ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையின் தலைவர் ஸ்ரீயான் டி சில்வா விஜயரத்ன அவர்களினால் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.

கௌரவ பிரதமர் குறித்த காசோலையை அச்சந்தரப்பத்திலேயே மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்க்ஷ அவர்களிடம் கையளித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெறும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபை உறுப்பினர்களின் 9000 பிள்ளைகளுக்கு ஒருவருக்கு தலா 15,000 ரூபாய் வீதம் புலமைப்பரிசில் வழங்கப்படும்.

1994ஆம் ஆண்டு தொழில் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய இந்த புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் இவ்வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

தேசத்தின் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்கும், தொழிலாளர் பெருமக்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் ஒரு உன்னத பணியாக இப்புலமைப்பரிசில் வழங்கப்பட்டு வருகிறது.

புலமைப்பரிசில் பெறும் பிள்ளைகளுக்காக குறித்த நிதி மக்கள் வங்கியின் சிசு உதான வங்கிக் கணக்கில் வைப்பிலிடும் போது மலளசேகல சிங்கள – ஆங்கில அகராதி பரிசளிக்கப்படுவதுடன், சாதாரணமாக சிசு உதான வங்கிக் கணக்கிற்கு வழங்கப்படும் வட்டி வீதத்திற்கும் அதிகமான வட்டி இக்கணக்கிற்கு வழங்கப்படும்.

குறித்த சந்தர்ப்பத்தில் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் தலைவர் ஸ்ரீயான் டி சில்வா விஜயரத்ன, மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்க்ஷ, ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபை பொது முகாமையாளர் டி.பீ.ஜீ.பெர்னாண்டோ, மக்கள் வங்கியின் பொது முகாமையாளர் ரஞ்சித் கொடிதுவக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் எம்.ஜீ.ஏ.சமன் குமார உள்ளிட்ட ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபை மற்றும் மக்கள் வங்கி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.