என் மகன் ஒரு போராளி; மீண்டு வருவார்…ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய வருண் சிங்கின் தந்தை நம்பிக்கை

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி முப்படை தலைமை தளபதி விபின் ராவத், அவருடைய மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தில் தள்ளிய நிலையில், அந்த விபத்தில் உயிர் தப்பிய ஒரே நபரான க்ரூப் கேப்டன் வருண் சிங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

45 சதவீத தீக்காயங்களுடன் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வருண் சிங், பின்னர் மேல் சிகிச்சைக்காகப் பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குச் சிறப்பு மருத்துவக் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

இதுகுறித்து அவரது தந்தை ஓய்வு பெற்ற கர்னல் கே.பி. சிங் கூறுகையில், “எனது மகன் எப்படி இருக்கிறார் என்பதைச் சரியாகக் கூற முடியாத அளவுக்கு அவரது உடல்நிலையில் மாற்றங்கள் உள்ளன. எனது மகனின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒரு சமயம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. சில சமயம் மோசமாக உள்ளது. நம்மால் இப்போது எதுவும் சொல்ல முடியாது.

அவர் இப்போது மிகச் சிறந்தவொரு மருத்துவ குழுவினரின் கைகளில் உள்ளார். அங்கு உள்ள சிறந்த மருத்துவ குழுவினர் அவருக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் வருண் சிங் குணமடைய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்கின்றனர். முன் பின் அறிமுகம் இல்லாத பலரும் கூட வருண் சிங் குணமடைய வேண்டும் என என்னைச் சந்தித்துக் கூறுகின்றனர். அவரை (வருண்) பார்க்க வேண்டும் என்பதை அனைவரது விருப்பம். இப்படியொரு அன்பும் பாசமும் தான் வருணுக்கு கிடைத்துள்ளது.

வருண் சிங் ஒரு போராளி. அவர் கண்டிப்பாக வெற்றியுடன் மீண்டு வருவார். இதையெல்லாம் தாண்டி அவர் கண்டிப்பாக வெளியே வருவார்” என்று அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்னல் கேபி சிங் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு அவரின் உடல்நிலை குறித்து தொடர்ந்து விசாரித்துவருகிறார். முன்னதாக வருண் சிங்கை காப்பாற்ற அனைத்து வகையான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.