‘இந்தியா இந்துக்களின் தேசம்’ – ராகுல் காந்தி கருத்தால் சலசலப்பு

இந்தியா இந்துக்களின் நாடு, நான் ஒரு இந்து ஆனால் இந்துத்துவவாதி அல்ல என ராகுல் காந்தி பேசிய பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விலைவாசி உயர்வு அதிகரித்து வருவதை கண்டித்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மிகப்பெரிய கண்டன பொதுக்கூட்டத்தை கடந்த ஞாயிறன்று (டிச 12) காங்கிரஸ் கட்சி நடத்தியிருக்கிறது. இதில் சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, “அரசியலில் இரு வார்த்தைகளுக்கிடையே ஒரு மோதல் உள்ளது என்றார். இந்து மற்றும் இந்துத்துவவாதி ஆகிய அந்த இரண்டு வார்த்தைகளுக்கு வெவ்வேறு அர்த்தம் இருக்கிறது. நான் ஒரு இந்து, இந்துத்துவவாதி கிடையாது.

மகாத்மா காந்தி ஒரு இந்து. ஆனால் அவர் கோட்சே எனும் இந்துத்துவவாதியால் கொல்லப்பட்டார். இதில் என்ன வித்தியாசம்? எது நடந்தாலும் இந்து உண்மையை விரும்புபவன். அனைத்து நம்பிக்கைகளையும் மதித்து நடப்பவன். அவன் தன் வாழ்நாள் முழுதும் உண்மையை கண்டறிய செலவிடுகிறான். அவன் சத்யாகிரக வழியில் வாழ்பவன். அதே நேரத்தில் இந்துத்துவவாதி தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அதிகாரத்தை தேடி செலவிடுகிறான். அதிகாரத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். யாரை வேண்டுமானலும் கொல்வான்.

இந்த நாடு இந்துக்களின் தேசம். ஆனால் இந்துத்துவவாதிகளின் தேசம் அல்ல. 2014ம் ஆண்டில் இருந்து இந்நாட்டை இந்துத்துவவாதிகள் தான் ஆளுகிறார்கள், இந்துக்கள் அல்ல. அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றி இந்துக்களின் ஆட்சியை மலரச் செய்ய வேண்டும்” இவ்வாறு அந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசினார்.

ராகுலின் இந்த பேச்சு அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி வாக்குகளுக்காக இந்துக்கள் பக்கமாக திரும்புவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஓவைசி:

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பேச்சு குறித்து அனைத்திந்திய மஜ்லிஸ் இத்தேஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் ஓவைசி கூறுகையில், ‘இந்துக்களை அதிகாரத்துக்கு கொண்டு வருவது தான் 2021ம் ஆண்டின் மதச்சார்பற்ற அஜெண்டா!’ என தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா இந்துக்களுக்கு மட்டுமல்ல, பாரத நாட்டினர் அனைவருக்குமானது. அனைத்து நம்பிக்கை கொண்டோருக்கும், மத நம்பிக்கையே அற்றவர்களுக்குமானது இந்தியா” என ஓவைசி தெரிவித்துள்ளார்.

சிவசேனா:

காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் உள்ள சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் வெளியாகியுள்ள கட்டுரையில், “இந்து – இந்துத்துவா என்ற வார்த்தைகளின் அர்த்தங்களை வேறுபடுத்த வார்த்தை ஜாலத்தை பயன்படுத்தியிருப்பதை கடந்து அவர் நீண்ட காலத்திற்கு பிறகு பெரும்பான்மை சமூகத்துக்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார் ராகுல் காந்தி.

பயனற்ற மதச்சார்பின்மையில் சிக்கித் தவித்த காங்கிரஸுக்கு புதிய திசையை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சித்துள்ளார். இதன் மூலம் 2024 பொதுத்தேர்தலுக்கு புதிய பாதையை ராகுல் காட்டியிருப்பதாக அந்த நாளேட்டில் கருத்து தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.