ஒமைக்ரான்: போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் – கீதா கோபிநாத் எச்சரிக்கை

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்தார்.

தென்ஆப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குணமடைந்து, வீடு திரும்பியிருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.

இதேபோல, குஜராத் மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றுக்கு உள்ளான 34 வயதான நபர், அதிலிருந்து குணமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வீடியோ வெளியிட்டுள்ள அந்த நபர், தனக்கு ஏற்கனவே டெல்டா தொற்று ஏற்பட்டதாகவும், அதன்பிறகு, தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், ஒமைக்ரான் தொற்று பரவியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒமைக்ரான் தொற்றைவிட டெல்டா தொற்றே தனக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று, அடுத்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு இருப்பதாக சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்தார். எனினும், கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய டெல்டா வகை வைரஸைவிட பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று அவர் தெரிவித்தார். தொற்று வேகமாக பரவும்போது, போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மனிதர்களின் நுரையீரலில் டெல்டா வகை தொற்றைவிட, 70 மடங்கு அதிவேகத்தில் ஒமைக்ரான் பரவும் என்று ஹாங்காங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேநேரம், டெல்டாவை விட 10-ல் ஒரு பங்கு அளவுக்கே பாதிப்பு இருக்கும் என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

தென்கொரியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் சனிக்கிழமை முதல் அடுத்த மாதம் 2-ம் தேதிவரை, நான்கு பேருக்கும் மேலாக ஒன்றுகூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், பார்கள் ஆகியவற்றை இரவு 9 மணிக்குள்ளும், திரையரங்குகள் மற்றும் இணையதள மையங்களை இரவு 10 மணிக்குள்ளும் மூட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவின் உஹான் ஆய்வகத்திலிருந்தே கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்பு உள்ளதாக பிரிட்டன் நாடாளுமன்றக் குழுவிடம் கனடாவைச் சேர்ந்த மூலக்கூறு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.