முல்லைத்தீவு இந்துபுரம் பகுதியில் கணவனை அடித்து கொன்ற மனைவி கைது!

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவில் பிறிதொரு நபருடன் இணைந்து கணவனை அடித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேக நபரையும் பொலிசார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் கடந்த 09.12.2021 அன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மாங்குளம் பொலிசார் சந்தேகநபரான மனைவியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக்கொண்டு மனைவியையும், அவரது இரகசிய காதலனான மற்றுமொரு சந்தேக நபரையும் கைது செய்ததுடன், இன்றைய தினம் சான்று பொருட்களையும் மீட்டனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்துபுரம் பகுதியில் 36 வயதுடைய முன்னாள் போராளியான நடராசா தனராஜ் 31 வயதான கீதாஞ்சலியை திருமணம் செய்து 8 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதன் பின்னர் திருமணம் செய்துள்ளார். பெற்றோர் இல்லாத நிலையில் மூத்த சகோதரி திருமணம் முடித்துள்ள அதேவேளை மற்றுமொரு இளைய சகோரதி இவரின் பாதுகாப்பில் உள்ளார்.

இருவருக்கும் குழந்தைகள் இல்லாத நிலையில் இருவரும் தனியான வீட்டில் வசித்து வந்துள்ளனர். கணவர் இல்லாத பொழுது கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 36 வயதான இராசநாயகம் ஜெயபாலன் என்பவருடன் 5 வருடங்களாக கள்ள தொடர்பு இருந்துள்ளாதாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் மாலை 7 மணியளவில், உயிரிழந்தவரின் வீட்டுக்க அண்மித்த பகுதியில் தனராஜ் ஏ9 வீதியின் அருகில் உள்ள பூவரசு மரத்தினடியில் இருந்துள்ளார். வீதியால் சென்ற கிராமத்தவர்கள் அவரை கண்டு வினவியபோது, தான் புகையிலையை அதிகம் எடுத்துக்கொண்டதால் தலை சுற்றுகின்றது. அதனால் இங்கு இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தனராஜ்ஜை உறவினர்கள் நால்வர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று அவரது வீட்டின் அறையில் சேர்த்துள்ளனர். இதன்போது அவருடைய மனைவியும் அங்கு இருந்துள்ளார். அதேவேளை கொலை செய்ததாக வாக்குமூலம் அளிக்கப்பட்ட மற்றைய சந்தேக நபரான ஜெயபாலனும் வீட்டில் மறைந்திருந்ததாக மனைவியான கீதாஞ்சலி பொலிசாரின் விசாரணையில் குறிப்பிட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதனை அடுத்து சில மணி நேரத்தில் கீதாஞ்சலி சிறிய தாயாரின் வீட்டுக்கு சென்று தேனீர் அருந்திவிட்டு 30 நிமிடங்களின் பின்னர் உறவினர்களையும் அழைத்து வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது அவர் பேச்சு மூச்சின்றி கிடப்பதை அவதானித்த உறவினர்கள் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சடலம் இரவு 11 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தமை வைத்தியர்களால் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலயைில் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் பாரப்படுத்துவதற்கு மாங்குளம் பொலிசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்டமையால், நீதிமன்ற விசாரணைக்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் உதவி பெறப்பட்டது. சம்பவம் இடம்பெற்ற பகுதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற எல்லைக்கு மிக அண்மித்த பகுதி என்பதால் இவ்வாறு உதவி பெறப்பட்டது.

இந்த நிலையில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு திடீர் மரண விசாரணை அதிகாரியிடம் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிங்கராசா ஜீவநாயகம் விசாரணை மேற்கொண்டிருந்தார்.. இதன்போது கொலை செய்யப்பட்டவரின் மனைவி வழங்கிய வாக்குமூலமும், சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையும், கிராமத்தவர்களால் வழங்கப்பட்ட இரகசிய தகவல்களும் விசாரணையை திருப்பி போட்டுள்ளது.

குறித்த மரணம் திடீரென்று ஏற்ட்ட மரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவியால் விசாரணையின் போது குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அவரது உறவினர்களும் மனைவியின் வாக்குமூலத்திற்கு அமைவாகவே மரணம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், குறித்த நபர் அமர்ந்திருந்த பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றதற்கான சான்றுகள் காணப்பட்டமை தொடர்பில் திடீர் விசாரணை அதிகாரிக்கு கிராமமட்ட செயற்பாட்டாளர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையினடிப்படையில் முதுகு விலா என்புகள் உடைந்துள்ளமையும், முதுகு பகுதியில் உட்காயமும் இரத்த கண்டல்களும் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் திடீர் மரணம் என குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மற்றும் கிராம மட்ட செயற்பாட்டாளர்களின் தகவல்களையும் அடிப்படையாக கொண்டு வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். இதன்போது மனைவி வழங்கிய வாக்குமூலத்திற்கும், அழைத்து சென்றவர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

விசாரணை மேற்கொண்டிருந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சிங்கராசா ஜீவநாயகம் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், வாக்குமூலம், உடற்கூற்று அறிக்கை ஆகியன பலத்த சந்தேகங்களை உருவாக்குயுற்றதாக கிளிநொச்சி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

தொடர்ந்து உயிரிழந்தவரின் சடலத்தை சட்டவைத்திய அதிகாரியின் முழுமையான உடற்கூற்று பரிசோதனையின் பின்னர், மாங்குளம் பொலிசாரின் கண்காணிப்பில் பொன்னகர் மயானத்தில் புதைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த நபரின் சடலம் பொலிசாரின் கண்காணிப்பில் பொன்னகர் மயானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை புதைக்கப்பட்டது.

தொடர்ந்து மரணம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு சம்பவம் தொடர்பில் அறிக்கையிடுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கு அமைவாக விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்த மாங்குளம் பொலிசார் சந்தேக நபர்களான கொலை செய்யப்பட்டவரின் மனைவியையும், அவரது 5 வருட இரகசிய காதலனையும் விசாரணைக்காக நேற்றைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதன்போது, தானும், ஜெயபாலன் என்ற சந்தேக நபரும் இணைந்து கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஜெயபாலன் சவள் ஒன்றினால் முதுகு பகுதியில் தாக்கியதாகவும், பின்னர் விபத்து ஏற்பட்டது போன்று காண்பிப்பதற்காக உயிரிழந்தவரின் சைக்கிளை கல்லினாலும், இரும்பு கம்பியினாலும் அடித்து நெளிவுகளையும், உடைவுகளையும் ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக்கொண்டு சந்தேக நபரான உயிரிழந்தவரின் மனைவியை இன்று பொலிசார் அவரது வீட்டுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதுடன், சவல் மற்றும் உயிரிழந்தவரின் மேல் ஆடை உள்ளிட்டவற்றை மீட்டுள்ளனர். அதன் அடிப்படையில் அடித்து கொலை செய்யப்பட்டமைக்கான சான்று பொருட்கள் பொலிசாரால் இன்றைய தினம் மீட்கப்பட்டது.

கொலை செய்துவிட்டு, விபத்தில் உயிரிழந்தது போன்றதான தோற்றப்பாட்டை காண்பிக்க முற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மாங்குளம் பொலிசார் விசாரணை அறிக்கை மற்றும் சான்று பொருட்களுடன் சந்தேக நபர்களை முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கொலை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள இராசநாயகம் ஜெயபாலன் என்பவர் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாங்குளம் வட்டார வேட்பாளராக களமிறங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.