அந்நியன் பாணி நடிப்பில் போலீசாரையே அலற விட்ட பிக்பாக்கெட் திருடன்

வட மாநில தொழிலாளர்களிடம் கைவரிசை காட்டும் பிக் பாக்கெட் திருடன். பிடிபட்ட உடன் அந்நியன் பாணி நடிப்பில் போலீசாரையே அலற விட்ட மகா நடிகன்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த கவின் ஜாய். இவர் பெங்களூரில் உள்ள தனது நண்பரை காண செல்வதற்காக திருப்பூர் பழைய பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது மது அருந்த நினைத்து அருகில் இருந்த டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு கையில் அதிக பணத்தை வைத்துக் கொண்டு கவின் ஜாய் மது அருந்தி வருவதை கண்ட இளைஞர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து வந்துள்ளார்.

கவின் ஜாய் பேருந்தில் ஏற முயன்ற போது அந்த இளைஞர் தனது பொருட்களை காணவில்லை எனக் கூறி கவினை சோதனை செய்வது போல செல்போன் மற்றும் பாக்கெட்டில் வைத்திருந்த 12 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி உள்ளான். அது தன்னுடைய பணம் என கவின் தெரிவித்த போது அந்த இளைஞர் அருகில் இருந்த தனது நண்பனிடம் பணத்தை கைமாற்றி அனுப்பி விட்டு கவினை தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த கவினின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் இருவரையும் பிடித்து விசாரித்ததில் கவினின் செல்போன் மற்றும் பணத்தை அந்த இளைஞன் திருடியது தெரியவந்தது.

உடனடியாக செல்போனை கவினிடம் பெற்றுத் தந்த பொதுமக்கள் அந்த திருட்டு இளைஞனை சரமாரியாக தாக்கி அருகில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரை கண்டதும் அந்த திருடன் அந்நியன் போல நடிக்க துவங்கினான். தன்னை எல்லோரும் தாக்கி விட்டனர் எனது மண்டை உடைந்து விட்டது என கீழே விழுந்து மயங்கியவன் போல படுத்து பின்னர் உடனடியாக எழுந்து கவினை பார்த்து நீ தானே என்னை அடித்தாய் வா போலீசிடம் போகலாம் என வீர வசனம் பேசினான். இருவரும் மது போதையில் இருந்ததால் ஒரு ஓரமாக அமர வைத்தனர்.

அப்போது கவின் அந்த திருடனிடம் என் பணத்தை கொடு என கேட்டதும் போதை தலைக்கேறி மயங்கியது போல அசைவற்று படுத்து தான் ஒரு மகா நடிகன் என்பது போல நடிக்க துவங்கினான். போலீசார் கவினை விசாரிக்க துவங்கியதும் டப் என்று எழுந்து அமர்ந்து கொண்டான். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த திருடனின் சேட்டையால் போலீசார் விழிபிதுங்கி செய்வதறியாது திகைத்து நின்றனர்.

பின்னர் போலீசார் விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞன் பெயர் ராகுல் என்பதும் கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. இருவருக்கும் காயம் ஏற்பட்டிருந்ததால் இருவரையும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.