விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! PM-KISAN நிதியுதவி ₹2000 ஜனவரி 1-ம்தேதி வங்கி கணக்கில் வந்துவிடும் என அறிவிப்பு

விவசாயிகளுக்கான நிதியுதவியை 10-வது தவணையாக புத்தாண்டு அன்று பிரதமர் மோடி வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பிரதமர் விவசாயிகள் நிதியுதவி’ திட்டத்தின் கீழ், கடந்த 2019 டிசம்பர் முதல், சிறிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளில் தலா 2,000 ரூபாய் வீதம் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரைக்கும் 9 தவணைகளாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புத்தாண்டு அன்று 10-வது தவணையாக நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

அடிமட்டத்தில் இருக்கும் விவசாயிகளை அதிகாரப்படுத்த வேண்டுமென்ற உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, பிரதமர் மோடி, பிரதமரின் உழவர் கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் (பிஎம் – கிசான்) 10-வது தவணை நிதியுதவியை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி பகல் 12.30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் விடுவிக்கிறார். ரூ.20,000 கோடிக்கும் மேற்பட்ட இந்தத் தொகை மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பயனாளிக் குடும்பங்கள் பயனடையும்.

பிஎம் – கிசான் திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதிப் பயனாக வழங்கப்பட்டு வருகிறது. இது 4 மாதத்துக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த நிதிப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக விடுவிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ.1.6 லட்சம் கோடிக்கும் மேல் உதவித் தொகை விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர், சுமார் 351 விவசாய உற்பத்தி அமைப்புகளுக்கு ரூ.14 கோடிக்கும் மேற்பட்ட தொகை பங்கு மானியமாக விடுவிப்பார். இதன் மூலம் 1.24 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள்.

இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் விவசாய உற்பத்தி அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடுவதுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.