பொது இணக்க ஆவணம் தயாரிக்க தமிழ்ப் பேசும் கட்சிகள் உடன்பாடு!

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளை ஒன்றுபட்டுப் பிரதிபலிக்கும் பொது ஆவணம் ஒன்றை மேலும் காலம் தாழ்த்தாமல் விரைந்து தயாரித்து முடிப்பது என்ற இணக்கப்பாட்டுக்கு தமிழ்ப் பேசும் மக்களின் கட்சித் தலைவர்கள் வந்துள்ளனர்.

தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் அவரின் தலைமையில் நேற்று மாலை 6 மணி முதல் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றிய ரவூப் ஹக்கீம் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்), மனோ கணேசன் (தமிழ் முற்போக்குக்குக் கூட்டணி), எம்.ஏ.சுமந்திரன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தின் தீர்மானங்கள் குறித்து சுமந்திரன் எம்.பி. வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

“ஐக்கியமாக நாங்கள் தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதில் நம் அனைவருக்கும் இடையில் ஒத்த நிலைப்பாடு இருந்தது. அதில் மாற்றுக் கருத்து இல்லை.

நாம் ஒன்றுபட்டு செயற்படுவது முக்கியம் என எல்லோரும் வலியுறுத்தினர். எல்லாத் தரப்பினருக்கும் இருக்கும் கரிசனைகளைக் கருத்தில் எடுத்து, இந்த ஆவணத் தயாரிப்பை வெகுவிரைவில் ஓர் இணக்கப்பாட்டுடன் நாம் முடிவுக்குக் கொண்டு வந்து, அதை வெளிப்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

சம்பந்தன் ஐயா தலைமையில் ஹக்கீம், மனோ, செல்வம், சித்தார்த்தன், நான் ஆகிய அறுவரும் நேற்று சுமார் இரண்டு மணி நேரம் இவ்விடயங்களை விரிவாகப் பேசினோம்.

இது தொடர்பில் காலம் கடந்தாமல் துரிதமாகப் செயற்படுவதற்காக இன்று முற்பகல் 11 மணிக்கு எனது இல்லத்தில் உள்ள எனது அலுவலகத்தில் எங்களில் சிலர் திரும்பவும் கூடி இந்த ஆவணத்தை இறுதி செய்யும் செயற்பாட்டை முன்னெடுக்கத் தீர்மானித்துளோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.