எவருமறியா இருள் – சிறுகதை உஷா கனகரட்ணம்

ஜன்னலினூடாக எப்போதும் தெரியும் பரபரப்பான வீதியோ, பளிச்சிடும் நியோன் விளக்குகளோ கண்களுக்கு உறுத்தலாக இல்லை. அத்தனை பனிப்புகார். நம் பார்வைக்குத் தோன்றும் காட்சிகளின் மயக்கம் சில மணிநேரமானாலும் இத்தனை ஆசுவாசத்தை ஏற்படுத்துகிறதே. இதுபோல் நானும் மறைந்து விடப் போகிறேன். அருவமாய்..காற்றாய்க் கரைந்து விடுவேன். எதுவுமே என் புலன்களை உறுத்தாத நிலைக்குப் போய்விடுவேன். ஓரிரண்டு வாரமாகவே இப்படித் தான் அடிக்கடித் தோன்றுகிறது. விடிந்ததுமே இது என் கடைசி நாள் எனும் அந்த உள்ளுணர்வு. என்னைச் சுற்றிப் பிரளயமே தோன்றினாலும் என்னிடம் கணநேர அதிர்வே தெரிகிறது. பிறர் தவறைச் சுலபமாக மன்னிக்க முடிகிறது. நேர காலமின்றித் தொலைபேசியில் அழைக்கும் சந்தைப்படுத்தல் சேவையினரிடம் கூட இதமாக இரண்டு வார்த்தைகள் பேசி வைக்கிறேன். கோபமோ, கவலையோ தூக்கிச் சுமக்காமல் சம்பந்தப்பட்டவரை விட்டு லிலகிச் செல்லுகையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன். இது நன்றாகத் தான் இருக்கிறது. போகிற வழியில் சுமைகளை ஏற்றுவானேன்…

ஆனால் நான் மட்டும் தானா இப்படி நினைக்கிறேன்..? செழியன் தினமும் விட்டுப் போகிறார்… எந்த ஒரு ஆயுதமும் ஏற்படுத்த முடியாத ஆழமான காயங்களை வெறும் வார்த்தைகளை வீசிச் சுலபமாகக் கொடுத்துவிட்டு…. பல கேள்விகளுடன்…. இயலாமையுடன், பாதுகாப்பின்மையுடன் என்னைத் தவிக்க விட்டுப் போய் உறங்கி விடுகிறார். விடிந்தால் இருப்போமா என்றெல்லாம் என் போல அவர் யோசிக்கவே மாட்டாரோ..? அவர் மனதில் எனக்காக ஒரு சின்ன soft corner கூட ஏற்படுத்த முடியாத அளவிற்கா 20 வருடம் வாழ்ந்து முடித்திருக்கிறேன்..!

தோளுக்கு மேல் வளர்ந்து விட்ட பிள்ளைகள் என்னைக் கடிந்து கொள்ளும் வரை அவர்கள் மேலுள்ள பைத்தியத்தைக் கொட்டியும் எனக்குத் தீரவில்லை. கொள்ளை கொள்ளையாய் இருப்பதை ஒரே நாளில் மீதமின்றிக் கொடுத்து, அது போதும் என்ற திருப்தியுடன் என்னால் போக முடியுமா? எட்டாம் வகுப்பில் பேச்சு முற்றி நட்பு முறிந்து போன தமிழரசியைத் தொலைபேசியில் அழைத்து மன்னிப்புக் கோரினேன். பழைய நினைவுகளை முற்றும் தொலைத்தவள் போல கலகலப்பாய் நலம் விசாரித்தாள். மனதிலே எதையும் வைத்துக்கொள்ளாத ஒரு நட்பிடம் கடைசி கடைசியாகப் பேசக் கிடைத்தது எவ்வளவு பெரிய பாக்கியம்.

அன்பாகப் பேசத் தெரியாதவனாக இருந்தாலும் என் அண்ணன் மட்டும் இல்லையென்றால் பெற்றோரை இழந்தபின் 10 வயதிலேயே நான் அனாதையாகி விட்டிருந்திருப்பேன். எப்போதும் வேடிக்கையாகவே பேசிப் பழகுபவனை வேலைத்தலத்தில் சந்தித்து, உன்னைப் போல ஒருத்தன் எனக்கு அண்ணனாக் கிடைச்சதில எனக்கு எவ்வளவு பெருமை தெரியுமாண்ணா.. வேற ஒருத்தன் எண்டா தன்ர வாழ்க்கையை மட்டும் பாத்துக்கொண்டு போயிருப்பான். அண்ணி உனக்குக் கிடைச்ச பெரிய வரமண்ணா. உன்னைப் போலவே அவவிலும் நான் அன்பு வெச்சிருக்கிறேன் என்று அவவிடம் சொல்லண்ணா என்று சொன்னேன். என் கண்கள் கலங்கி விட்டன. அண்ணா என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தான் . அவனுக்குக் கொஞ்சம் சங்கடமாயிருந்திருக்க வேண்டும். எங்கயாவது ஓடிப் போகப் போறியா என்று கேலி செய்தான். எப்படியோ, அவனிடம் என் மனதில் உள்ளதைச் சொல்லிவிட்டதில் பெரும் திருப்தி எனக்கு. முடிந்தது.

என் குஞ்சுகளுக்கு சமையல் பிடிக்காது தான்.. ஆனால் அவசியம் என்றால் எதையாவது செய்து சாப்பிடுவார்கள் என்ற நம்பிக்கை இப்போது வந்திருக்கிறது. இருந்தும், சமையல் முடிந்தால், ஒரு நாளைக்காவது எஞ்சியிருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன். சாவு வீட்டில் உடனே சமைக்கவா செய்வார்கள்!

பெரியவளிடம் ஒருபடியாக வங்கி இலக்கம், கடவுச் சொல் போன்றவற்றைக் கொடுத்தாயிற்று. ஒருவர் மேல் ஒருவர் அக்கறை உள்ள குழந்தைகளாக இருக்கிறார்கள். தனித்துப் போய் விடுவார்களோ என்ற கவலை வேண்டாம். பட்டும் படாமல் பழகும் செழியனின் தங்கையிடம் பாரபட்சமின்றிப் பேசி அவளுடைய திறமைகளை மனம் விட்டுப் பாராட்டியாயிற்று. அப்புறம்….கதிர்…
உருகி உருகிக் காதலித்தவனை அலைக்கழித்து விட்டேனோ… எத்தனையோ சிரமப்பட்டுத் தொலைபேசி இலக்கத்தை எடுத்து அவனை அழைத்துப் பேசியதன் பின்னர் வெகு நேரமாய் ஒரு சின்ன எரிச்சல் மண்டையை அரித்துக் கொண்டிருந்தது. அவனது குரலும் பேச்சும் சுத்தமாக மாறி விட்டிருந்தது. அவனிடம் பேசும் வரை சொந்த புத்தியற்ற, மன உறுதியில்லாத ஒரு 25 வயதுப் பையனாகவே நினைவில் நின்றவன் இப்போது அநியாயத்திற்கு அறிவுரை சொல்கிற அளவுக்குப் பக்குவமடைந்திருந்தது புரிந்தது. நான் அவனை அழைத்த காரணத்தைக் கேட்டதும் அதை முட்டாள்த்தனம் என்றான். தன்னை இழந்து விட்டதற்காகக் காலம் கடந்து வருந்தித் தன்னைத் தொடர்பு கொண்டதாய் நினைத்தானோ… அல்லது காடு போகும் வயதில் ஏதோ நிறைவேறாத ஏக்கங்களுடன் தன் உறவைத் தேடி வந்திருக்கிறேன் என்று நினைத்தானோ தெரியவில்லை. என் பிள்ளைகளுக்கே சுலபமாகப் புரிகிற விஷயங்களை அறிவுரையாய்ப் பொழிந்து தலைவலிக்க வைத்தான்.. அறிவுரை… அதுவும் கதிரிடமிருந்து பெறுமளவிற்குப் போய் விட்டோமே என்று ஒரு கணம் என் மேல் கோபம் ஏற்பட்டாலும், கடந்து விட்ட காலங்களில் அவன் முதிர்ச்சி பெற்றிருப்பதும் என் நிராகரிப்பினால் அவன் சிறிதும் பாதிக்கப்படவில்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்ததும் மனதுக்குத் திருப்தியாக இருக்கிறது. முடிந்தது.

வாசல் அழைப்பு மணி அடிக்கவே, கயல் அவசரமாக அந்த நாட்குறிப்பை மூடி வைத்து விட்டுச் சென்று கதவைத் திறந்தாள். அம்மாவின் நினைவு மலர் அச்சுப் பிரதிகள் வந்திருந்தன. முன் பக்கத்தில் அம்மாவின் படம். நீண்ட கூந்தலை உயரத் தூக்கி முடிந்து சினேகமாய்ச் சிரித்த அம்மாவின் அழகிய கண்கள் தன் உயிரையே தடவிக் கொடுப்பது போன்றதொரு சிலிர்ப்பு ஏற்பட்டது அவளுக்கு. படத்தின் கீழே, அன்னை மடியில் 01.08.1959. மண்ணின் மடியில் 07.10.2021 என்று எழுதப்பட்டிருந்தது. அவற்றை அப்படியே தூக்கி மேசை மேல் வைத்து விட்டு அதுவரை படித்துக் கொண்டிருந்த அம்மாவின் 2011ஆம் ஆண்டு நாட்குறிப்பை அலமாரியினுள் வைத்தாள். அருகிலேயே கிடந்த 2018 என்று எழுதப்பட்ட இன்னொரு நாட்குறிப்பு கவனத்தைக் கவரும்வகையில் பளிச்சென்ற நிறத்தில் தெரிய, அதை எடுத்து அதன் பக்கங்களைப் புரட்டினாள்.

***************************************************************
என் நாட்கள் ஒரே நினைவுடன் தான் விடிகின்றன. காலையில் எழுந்து கண்ணாடிக்கு முன் நின்றால் ஒரே எண்ணம் தான் தோன்றுகிறது. வீட்டில் உள்ள தொலைக்காட்சியையும், உடைகளைக் கழுவுகிற மெஷினையும் என் வாழ்க்கைக் காலத்தில் எத்தனை தடவைகள் மாற்றினேனோ தெரியவில்லை. இந்த 60 வருஷ காலப் பற்களை இன்னமும் தேய்த்துத் தேய்த்து, உலகமே தலைகீழாகப் போனாலும், கருவளையங்களும், தனியாகத் தொங்கிக் கொண்டிருக்கிற கரும்புள்ளிகள் நிறைந்த தோலுமாகவுள்ள அதே பழைய முகத்தைத் தண்ணீரை விட்டலம்பி …பகவானே…. இன்னும் எத்தனை நாட்கள் இந்தப் பாழாய்ப் போன உடம்புக்குச் சேவை செய்யப் போகிறேன்….
கடைசி நாள் என்ற என் உள்ளுணர்வால் செழியன் உட்படப் பலருக்கு நான் ஒரு வேடிக்கைப் பொருளாகி விட்டேன். சாவிற்கு ஆயத்தமாய் நிற்கும் என்னிடம் அகங்காரம் இல்லை. அது போலப் பிறரின் வெறுப்பையும் தாங்க முடியவில்லை. எந்த விஷயமாகட்டும் தன் கருத்தே இறுதியானது என நினைக்கும் செழியனின் ஆளுமையில் சோர்ந்து போகிறேன். அவனின் சின்னச்சின்ன முகச் சுருக்கங்களே சுட்டெரிக்கிறது. என்னை முழுவதுமாகப் பிறரிடம் தாழ்த்திக் கொள்வதனால் தான் என் மனம் இலகுவில் உடைந்து விடுவது புரிகிறது. போகட்டும். என் கதை தான் முடிந்து விட்டதே.
மூக்குக் கண்ணாடி உடைந்து பல மாதங்களாகியும் புதிதாக வேண்டாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறாயே என்று எப்போதும் கயல் என்னிடம் சத்தம் போடுகிறாள். பல ஆயிரங்கள் செலவழித்துக் கண்ணாடியை வாங்கி எத்தனை நாள் நான் அதைப் உபயோகிக்கப் போகிறேன் என்றே தோன்றுகிறது. இதை வெளியே சொன்னால் என்னை ஏதோ ஜந்துவைப் பார்ப்பது போலல்லவா பார்க்கிறார்கள். கயலின் திருமணம் முடிவாகி விட்டது. அவள் புத்திசாலி. சமாளித்துக் கொள்வாள். சின்னவன் மேற்படிப்பைத் தொடங்கி விட்டான். இனிமேல் எந்த விதக் குற்ற உணர்வும் இல்லாமல் நான் போக முடியும்.”
***************************************************************
கயல் நாட்குறிப்புகளை உள்ளே எடுத்து வைத்தாள். மனம் மட்டும் எதையெதையோ அசைபோட்டது. கடந்த ஒரு வருடமாகத் தன் புற்று நோய்க்கு வைத்தியம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவ்வளவு உறுதியாக அம்மா சொன்ன போது அவளுக்குப் புரியவில்லை. அர்த்தமின்றி அவள் அடம் பிடிப்பதாகவே கயலுக்குத் தோன்றியது. அப்பா வேறு அம்மாவை, “பிடிவாதக்காரி. பைத்தியம்” என்று பலதையும் காரணங்களாகச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தினம் தினம் அம்மாவின் நினைவுகளில் இருந்தது…..

Leave A Reply

Your email address will not be published.