தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 1,600-ஐ நெருங்கியுள்ளது

மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 2,029 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 1,594 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 51 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் ஒரேநாளில் 6 பேர் மரணம் அடைந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது.

நோய் தொற்றில் இருந்து 24 மணி நேரத்தில் 624 பேர் மீண்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 27 லட்சத்து 5 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 9 ஆயிரத்து 304 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 121 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதித்துள்ள நிலையில், 98 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக மாநில மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,500ஐ கடந்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி நாடு முழுவதும் ஆயிரத்து 525 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. தமிழகம், கேரளா உள்ளிட்ட 23 மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 460 பேரும், டெல்லியில் 351 பேரும் உருமாறிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட 560 பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்டாவை விட ஒமைக்ரான் தொற்று மிதமானது தான் என்பதால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் பரவலுக்கு மத்தியில் கொரோனா வைரஸும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் புதிதாக 27 ஆயிரத்து 553 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய நாள் பாதிப்புடன் ஒப்பிடுகையில் 21 விழுக்காட்டினர் கூடுதலாக தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கொரோனா பரிசோதனை, தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சையளிப்பது, தடுப்பூசி செலுத்துவது ஆகிய பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முந்தைய கொரோனா பாதிப்புகளின்போது கடுமையாக போராடியதாகவும், அப்போது கற்றுக் கொண்டவற்றின் மூலம் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு பணிகளில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

ஒமைக்ரான் வைரஸ் வேகமாகக் பரவக் கூடியது என்பதால், மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம் என்று வலியுறுத்தினார். திங்கட்கிழமை முதல் சிறார்களுக்கான தடுப்பூசி திட்டப் பணிகள் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மேற்குவங்கத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்படுகின்றன. திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சள் குளங்கள், அழகு நிலையங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியாற்றலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலக நாடுகள் தடுப்பூசி சமத்துவத்தை கடைப்பிடித்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் தொற்று நோய்க்கு முடிவு கட்டிவிடலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பூஸ்டர் தடுப்பூசி ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராக 88 விழுக்காடு நோய் எதிர்ப்பு திறன் அளிப்பதாக இங்கிலாந்தை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மூலக்கூறு மருத்துவ பேராசிரியர் எரிக் டோபோல் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 2-வது தவணை தடுப்பூசி செலுத்திய 6 மாதங்களுக்கு பிறகு ஒமைக்ரான் வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறன் 52 விழுக்காடாக குறைந்துவிடுவதாகவும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் போது நோய் எதிர்ப்பு திறன் 88 விழுக்காடாக அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.