நாட்டையே உலுக்கிய Bulli Bai செயலி விவகாரத்தில் இஞ்சினியரிங் மாணவர் கைது

நாட்டையே உலுக்கிய Bulli Bai செயலி விவகாரத்தில் 21 வயது பொறியியல் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Bulli Bai எனப்படும் மொபைல் செயலி மூலம் இஸ்லாமிய பெண்களை ஏலத்தில் விட்டதாக புகார் கூறப்பட்ட விவகாரத்தில் பெங்களூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரை தனிப்படை போலீசார் விசாரணைக்காக மும்பைக்கு அழைத்துச் சென்று கைது செய்தனர்.

புல்லிபாய் என்னும் மொபைல் செயலியில் இஸ்லாமிய பெண்கள் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. சமூக, அரசியல் தளங்களில் இயங்கி வரும் இஸ்லாமிய பெண்களை குறிவைத்து அவர்களுடைய சமூக வலைத்தள கணக்குகளில் இருந்து புகைப்படங்களை எடுத்து அதனை புல்லிபாய் செயலியில் சேர்த்து அப்பெண்கள் விற்பனை பட்டியலிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.

அரசியல், சினிமா, ஊடகத்துறை போன்ற துறைகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் இது குறித்து டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் புகார் அளித்தனர். இதையடுத்து இது குறித்து தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இந்த கணக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்ட போது இவை, GitHub என்ற தளத்தின் கீழ் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. இது மென்பொருள் மேம்பாட்டிற்கான இணைய ஆதரவை வழங்கும் நிறுவனமாகும்,.

மேலும் இச்செயலி குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பதிவிடும் கணக்குகளின், சீக்கியர்களின் கணக்குகள் போல தோற்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பினர் என்ற மாய கட்டமைப்பை உருவாக்க முயற்சித்தது தெரியவந்தது.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுல்லி டீல்ஸ் (Sulli Deals) என்ற செயலியில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு அவர்கள் விற்பனைக்கு என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு இது தடை செய்யப்பட்டது. தற்போது இதே சுல்லி டீல்ஸின் மறு பதிப்பாக தான் புல்லிபாய் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், பெங்களூருவை சேர்ந்த இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவரான விஷால் என்பவை நேற்று பெங்களூருவில் விசாரித்தது. பின்னர் இவரை மும்பைக்கு போலீசார் அழைத்துச் சென்று சுமார் 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இதன் முடிவில் இந்த மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த மாணவர் தவிர்த்து உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர் தாய் புல்லி பாய் செயலியின் மூளையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக போலீசார் தகவல்களை ஏதும் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகின்றனர். குற்றவாளிகள் யாரும் தப்பிவிடக் கூடாது என்பதற்காக விவரங்களை போலீசார் வெளியிடவில்லை என கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.