தேசிய அளவில் புதிதாக 6 கிளைகளை ஏற்படுத்தும் என்.ஐ.ஏ. – 300 பணியிடங்கள் உருவாக்கம்

இந்தியாவில் பயங்கரவாத தடுப்பு அமைப்புகளில் ஒன்றாக செயல்படும் தேசிய விசாரணை நிறுவனமான என்.ஐ.ஏ., தேசிய அளவில் புதிதாக 6 கிளைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் 300 பணியாளர்களுக்கான காலிப் பணியிடங்கள் உருவாக்கடவுள்ளதாக நியூஸ் 18 நிறுவனத்திற்கு பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் புதிய கிளைகள் அகமதாபாத், பெங்களூரு, பாட்னா, ஜெய்பூர், போபால், புவனேஸ்வரம் ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்படும். இதற்கான ஒப்புதலை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரை அடிப்படையில் மத்திய நிதியமைச்சகம் அளித்துள்ளது. இதுதொடர்பாக நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ஒட்டுமொத்தமாக 435 புதிய பணியிடங்களை உருவாக்க திட்டமிடப்பட்டு 300 பணியிடங்களை ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஒவ்வொரு கிளை அலுவலகத்திலும் குறைந்த 72 பேர் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் நிதித்துறைக்கு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், 50 பேருக்கு மட்டுமே நிதியமைச்சகம் அனுமதி அளித்திருக்கிறது. இவற்றில் பெங்களூரு, பாட்னா, போபால் ஆகிய கிளை அலுவலகங்களில் டி.ஐ.ஜி. அளவிலான அதிகாரிகள் தலைமை பொறுப்பில் இருந்து செயல்படுவார்கள். அகமதாபாத், புவனேஸ்வரம், ஜெய்ப்பூர் ஆகிய அலுவலகங்களில் மாவட்ட எஸ்.பி. அளவிலான அதிகாரிகள் தலைமை பொறுப்பில் இருப்பார்கள்.

அனைத்து கிளைகளிலும், தலா 5 இன்ஸ்பெக்டர்கள் அலுவலகத்திற்கு வரும் வழக்குகளை விசாரிப்பார்கள். அவர்களுக்கு தடயவியல் நிபுணர்கள் உதவியாளர்களாக பணிபுரிவர்.

நாடு முழுவதும் உள்ள என்.ஐ.ஏ. அலுவலங்களில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, 28 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டது. தற்போது நாடு முழுவதும் என்.ஐ.ஏ.வுக்கு 12 கிளை அலுவலகங்கள் உள்ளன. தலைமை அலுவலகம் டெல்லியில் செயல்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை என்ஐஏ விசாரித்து வருகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் எந்த அனுமதியும் என்ஐஏ வாங்கத் தேவையில்லை.

கடந்த 2008 டிசம்பர் 31-ம் தேதி நடந்த நாடாளுமன்ற வளாக தாக்குதலுக்கு பின்னர், என்ஐஏ அமைப்பதற்கான சட்டம் ஏற்படுத்தப்பட்டது. மும்பை தாக்குதல் நடந்தபோது, அதுதொடர்பாக அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. நாடு முழுவதும் பயங்கரவாத வழக்குகளை கையாள, சுதந்திரமான விசாரணை அமைப்பு தேவை என்ற நெருக்கடி அரசுக்கு எழுந்தது. இதன் அடிப்படையில் என்ஐஏ உருவாக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.