வேகமெடுக்கும் 3வது அலை: மருத்துவமனைகளை தயார்படுத்துங்கள்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை!

நாட்டில் மூன்றாவது அலை உச்சமடைவதற்கு முன்பாக அதிகபட்ச தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த ஜன.1ம் தேதி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதை சமாளிக்க மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், தற்காலிக மருத்துவமனைகளை அமைக்கவும், வீட்டிலேயே தனிமைப்படுத்திப்படும் நோயாளிகளை கண்காணிக்க சிறப்பு குழுக்களை அமைக்கவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தினார். சுகாதார உள்கட்டமைப்பை சரியான நேரத்தில் தயார்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், சுகாதாரா செயலாளர் ராஜேஷ் பூஷனின் கடிதத்தை குறிப்பிட்டு, கூடுதல் செயலர் ஆர்த்தி அஹூஜா அனைத்து மாநிலங்களுக்கும் எழுதிய கடிதத்தில், தற்காலிக மருத்துவமனைகளை அமைக்கும் பணிகள் தொடங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளை கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கான படுக்கைகளாக மறுபரிசீலனை செய்வதற்கான பணிகளை தொடங்க வேண்டும். மேலும், அதிகபட்ச பாதிப்பாக எதிர்பார்க்கப்படும் அளவை காட்டிலும் அதிகமான அளவில் படுக்கைகளை தயார் நிலையில் இருப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல், ஹோட்டல் அறைகள் மற்றும் பிற ஒத்த தங்குமிடங்களை, பிரத்யேக கொரோனா மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு மையங்களுடன் இணைத்து லேசாசன மற்றும் அறிகுறியற்றவர்கள் தங்குமிடமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரிக்கும் பட்சத்தில், கையிருப்புப் பற்றாக்குறையைத் தவிர்க்க, சோதனை பொருட்கள் மற்றும் கிட்கள் (ஆர்டி-பிசிஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவி ஆகிய இரண்டும்) போன்ற தளவாடப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு, போதுமான அளவில் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆயத்த நடவடிக்கைகளை அதிக முன்னுரிமை வழங்கி மேற்கொள்ள வேண்டும் என்றும், இதனை வழக்கமாக கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.