அதிமுக அமைச்சர் வீடு அலுவலகங்களில் ரெய்ட்!

முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகனுக்குச் சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்ட் அடித்து வருகிறது.

முன்னாள் அமைச்சரான கே.பி அன்பழகன் மீது முன்பே அறப்போர் இயக்கம் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரில்

வருமானத்தை விட கூடுதலாக 11.32 கோடி ரூபாய் சொத்துக்குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கே.பி. அன்பழகன் 2016 முதல் 2021 வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கே.பி. அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கெரகோட அள்ளியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு மற்றும் வீட்டின் முன்பு அவருடைய ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

தர்மபுரி; இலக்கியம்பட்டியில் உள்ள பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நேருநகர் குடியிருப்பில் உள்ள கே.பி.அன்பழகன் உதவியாளர் பொன்னுவேலு வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனைக்கு உள்ளாகும் 6-வது அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் ஆவார். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி தங்கமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோர் வீடுகளில், அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.