ராஜபக்ச குடும்ப அரசின் வீழ்ச்சிக்கு முட்டைத் தாக்குதல் எடுத்துக்காட்டு! – சஜித் தெரிவிப்பு.

கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணி மீது முட்டைத் தாக்குதல் மேற்கொண்டமையும், ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரன் மீதான முட்டைத் தாக்குதல் சம்பவமும் அண்மைக்காலமாக ராஜபக்ச குடும்ப அரசும் சமூகமும் சீரழிந்து வருவதன் அளவை எடுத்துக்காட்டுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொள்கையில் இருந்து விலகி, வேலைத்திட்டங்கள் செயலிழந்து, விழுமிய மதிப்புக்களால் வீழ்ச்சி கண்ட நாட்டால் முன்னேற முடியாது எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், முட்டைத் தாக்குதல் போன்ற கேவலமான செயல்கள் சீரழிந்த ராஜபக்ச குடும்ப அரசின் யதார்த்தத்தையே புலப்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திறமையான இளம் தலைமுறையை உருவாக்கும் நோக்கில், வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணனி உபகரணங்களை வழங்கும் முன்னோடித் திட்டமான ‘பிரபஞ்சம்’ திட்டத்தின் 11ஆவது கட்டம் நேற்று ஆரம்பமானது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்துக்காக இந்நாட்டின் இளைய தலைமுறையை, தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற, ஸ்மார்ட் கணினிப் பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாகக் கட்டியெழுப்பும் ‘பிரபஞ்சம்’ முன்னோடித் திட்டத்தின் பதினோராவது கட்டத்தில், எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா மதிப்பிலான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை மதவாச்சி அகுநொச்சி மகா வித்தியாலயத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று வழங்கிவைத்தார்.

இதன்போது உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் முகமாக தகவல் தொழில்நுட்பப் புரட்சியை முன்கொண்டு செல்வது அதன் ஒரு தொடக்கங்களில் ஒன்றாகும். அதிகாரம் இல்லாமலேயே, நாம் குறித்த புரட்சியை நடத்துகின்றோம்.

பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக தகவல் தொழில்நுட்பப் புரட்சி, டிஜிட்டல் பொருளாதாரப் புரட்சி என்பவற்றைக் கூறலாம். இந்தப் புரட்சி உலகின் பல நாடுகளில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

அமெரிக்க பில்லியன் டொலர் வியாபாரம் என அடையாளப்படுத்தப்படும் கங்வேனன் வியாபாரம் உலகில் மிக வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது. இவற்றை உருவாக்கும்போது நம் நாட்டிலும் அந்நியச் செலாவணி பிரச்சினையோ – பற்றாக்குறையோ ஏற்படாது.

பிரபஞ்சம் போன்ற வேலைத்திட்டங்கள் குறித்து சிலர் கபடத்தனமாகப் பேசுகின்றனர். அவ்வாறானவற்றை நான் கருத்தில்கொள்வதில்லை.

இந்நாட்டின் குழந்தைகளுக்காக நாடு முழுவதும் பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.