கூண்டோடு டிரான்ஸ்பர் பண்ணிடுவேன்… பொதுமக்கள் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத போலீசை வாக்கி டாக்கியில் எச்சரித்த காவல் ஆணையர்

தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பள்ளிக்கரணையில் கணவர் தாக்கியதில் மனைவி காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் நான்கு முறை காவல் நிலையம் சென்று புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழ்நிலையில், இந்த தகவல் காவல் ஆணையருக்கு வரவே உடனடியாக வாக்கி டாக்கி மூலமாக பள்ளிக்கரணை போலீசாரை கூண்டோடு இடமாற்றம் செய்து விடுவேன் என்ற எச்சரிக்கையை வாக்கிடாக்கி மூலம் தாம்பரம் காவல் ஆணையர் ரவி பேசியுள்ளார்.

இதேபோன்று ஒழுங்காக பணி செய்யாமல் இருந்தால் கன்னியாகுமரி, திருநெல்வேலி இதுபோன்ற மாவட்டத்திற்கு தூக்கி அடித்து விடுவேன் என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவர் வாக்கிடாக்கியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரை தங்கள் பணியை தவிர வேறு ஏதேனும் வேலையை செய்திருந்தால் ஒட்டு மொத்தமாக தனுஷ்கோடிக்கு மாற்றி விடுவதாகவும் கடலலையை எண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பகிரங்கமாக அவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தாம்பரம் காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய காவல் நிலையங்களில் பணிபுரியக்கூடிய காவலர்களுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் தாக்கப்பட்டு சம்பவம் தொடர்பாக நான்கு முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை அவர் வாக்கிடாக்கி மூலமாக கேட்டிருக்கிறார். அதேபோல எதுக்காக போலீசாக இருக்கிறீர்கள் காவலர்கள் பொதுமக்கள் சேவகர்கள் என்று கூறுகிறீர்கள் அப்படி இருக்கும்போது உங்கள் பணியை நீங்கள் ஏன் செய்ய மறுக்கிறீர்கள். மக்களை துன்புறுத்தும் நோக்கத்தில் தான் பணிக்கு சேர்ந்தீர்களா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதேபோல சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் வந்தால் உடனடியாக புகாரை பெற்று சிஎஸ்ஆர் ரசீது கொடுக்க வேண்டும் சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் வந்தால் அதனை தலைமையகத்திற்கு அனுப்பக்கூடாது சிஎஸ்ஆர் பதிவு செய்ய வேண்டும் அதன் பிறகு அந்த வழக்கை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளலாம். ஆனால் புகாரை பெறாமலேயே இதுபோன்ற திருப்பி அனுப்புவது என்பது மிகவும் தவறான செயல்.

வேதனையோடு வரக்கூடிய மக்களிடம் புகாரை பெற்று அவர்களை மனநிறைவோடு அனுப்ப வேண்டும். பொதுமக்களை புகாரை வாங்காமல் அலைகழிக்கக்கூடாது. என்னைப் பொறுத்தவரை வேலையை சரியாக பார்க்க வேண்டும். இல்லையென்றால் சும்மா விடமாட்டேன் கூண்டோடு தூக்கி விடுவேன் அதன் பிறகு மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.