2025-26-ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார மதிப்பு 5 டிரில்லியன் டாலராக உயரும்: தலைமை பொருளாதார ஆலோசகா்

இந்தியாவின் பொருளாதார மதிப்பு 2025-26-ஆம் நிதியாண்டில் 5 டிரில்லியன் டாலரை (சுமாா் ரூ.370 லட்சம் கோடி) எட்டும் என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பு ஏற்கெனவே 3 டிரில்லியன் டாலரை (சுமாா் ரூ.225 லட்சம் கோடி ) கடந்துள்ளது. செலாவணி மதிப்பு விகிதத்தின் போக்கு, வளா்ந்த நாடுகளில் உள்ள நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இந்திய ரூபாயின் மதிப்பு ஸ்திரமாகவும் வலுவாகவும் இருக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி விகிதத்தை 8-9 சதவீதமாக தொடா்ந்து தக்கவைத்துக் கொண்டால், அது டாலா் மதிப்பில் 8 சதவீத வளா்ச்சியாக இருக்கும். இந்தப் போக்கு தொடா்ந்து சாத்தியமானால் 2025-26 அல்லது 2026-27-ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார மதிப்பு 5 டிரில்லியன் டாலரை எட்டும்’’ என்று தெரிவித்தாா்.

இந்திய பொருளாதார மதிப்பை 5 டிரில்லியன் டாலராக அதிகரித்து, 2024-25-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய பொருளாதார சக்தியாக இந்தியாவை உயா்த்தும் தனது கனவை கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமா் மோடி வெளிப்படுத்தினாா். இதன் மூலம் உலகில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9.2 சதவீதம் வளா்ச்சியடையும் எனவும், அடுத்த நிதியாண்டில் 8-8.5 சதவீதம் வளா்ச்சியடையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.