அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிக்க கோரிக்கை….

டொலர் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 1800 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன. கொள்கலன்களை விடுவிப்பது குறித்து வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் திங்கட்கிழமை (7) பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 500 அரிசி கொள்கலன்களும், பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் உள்ளிட்ட மேலும் பல உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன. டொலர் நெருக்கடி தீவிரமடைந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க முடியாத நிலைமை தோற்றம் பெற்றுள்ளது. டொலர் நெருக்கடி தீவிரமடைந்துள்ளதால் அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய சுமார் 1800 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன.

டொலரினை விநியோகிக்க மத்திய வங்கி உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும். இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாளைய தினம் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம். அத்தியாவசிய உணவு பொருட்கள் நீண்ட நாட்களுக்கு கொள்கலன்களின் அடைக்கப்பட்ட நிலையில் இருந்தால் அவை பழுதடைய கூடும். துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய கொள்கலன் விடுவிக்கப்படாவிடின் சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும்.

வர்த்தகர்கள் களஞ்சியப்படுத்தியுள்ள அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்க முயற்சிப்பார்கள். இப்பிரச்சினை குறித்து வர்த்தகத்துறை அமைச்சு அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.