பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

கலசபாக்கம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி தலைமையாசிரியராக காந்தபாளையம் கிராமத்தை சேர்ந்த காளியப்பன் வயது (55) என்பவர் பணியாற்றி வருகிறார். சுமதி என்பவர் உதவி ஆசிரியராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. அன்று முதல் தலைமையாசிரியர் காளியப்பன், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தலைமை ஆசிரியர் தங்களிடம் நடந்து கொள்ளும் நடைமுறைகளை பற்றி அழுதுக்கொண்டே மாணவி கூறியுள்ளனர்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு தலைமையாசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர், தலைமையாசிரியரை கண்டித்து பள்ளி எதிரே உள்ள போளூர்-மேல்சோழங்குப்பம் நெடுஞ்சாலையில் மாணவர்களுடன், பெற்றோர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த போளூர் துணை கண்காணிப்பாளர் குணசேகரன், கலசபாக்கம் ஆய்வாளர் ஜனார்த்தனன் மற்றும் போளூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதா, வட்டார கல்வி அலுவலர் ஜோதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.மேலும் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வட்டார கல்வி அலுவலரிடம் பெற்றோர்கள், பொதுமக்கள் மனு அளித்தனர்.இதுதொடர்பாக விசாரணை நடத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் நேற்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கலசபாக்கம் வட்டார கல்வி அலுவலகத்தில் தலைமையாசிரியர் காளியப்பனிடம், போளூர் கல்வி மாவட்ட அலுவலர் தயாளன் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் தலைமையாசிரியர் காளியப்பன் மீது குற்றம் நிரூபனமானதால், அவரை சஸ்பெண்ட் செய்து போளூர் கல்வி மாவட்ட அலுவலர் தயாளன் உத்தரவிட்டார். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், போளூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் அதன் பின்னர் தலைமையாசிரியர் காளியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அருட்செல்வத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பள்ளிக்கு தற்காலிகமாக வேறு பள்ளியில் இருந்து ஆசிரியரை நியமித்து இன்று முதல் பள்ளி வழக்கம்போல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.