சிறுமி வன்கொடுமை: குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை.

பருவமடையாத சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதால், மேல் நீதிமன்ற நீதிபதியால் குற்றம் புரிந்த நபருக்கு, 15 வருட கால கடூழியச் சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று இலட்சம் ரூபா இழப்பீடும், பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டன.

மொனராகலை மேல் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிபதி நதி அபர்னா சுவதுருகொட, குற்றம் புரிந்த நபரான நவசிரிபுர என்ற இடத்தைச் சேர்ந்த 43 வயதுடைய குமார பிரேமச்சந்திரவுக்கு மேற்படி தண்டனைகளை வழங்கினார்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14ஆம் திகதி மேற்படி சம்பவம், சிறுமியின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.

சிறுமியின் பெற்றோர் தனமல்விலைப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின்படி, குறிப்பிட்ட நபர் கைதுசெய்யப்பட்டு, மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதையடுத்து அந்த வழக்கு, மொனராகலை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

நீண்ட வழக்கு விசாரணைகளில், சந்தேகநபர் குற்றம் புரிந்தமை ஊர்ஜிதமாகியது. பின்னர் நீதிபதி குற்றம் புரிந்த நபருக்கு 15 வருட கால கடூழியச் சிறைத் தண்டனையை வழங்கியதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று இலட்சம் ரூபா இழப்பீட்டையும், அபராதமாக பத்தாயிரம் ரூபாவையும் வழங்குமாறும் உத்தரவிட்டார். இழப்பீடு வழங்கத் தவறின் கடூழியச் சிறைத்தண்டனை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கும் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

வழக்காளி தரப்பில் அரச சட்டத்தரணி ரூவிந்து பெர்ணந்து, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்து வாதாடினார்.

Leave A Reply

Your email address will not be published.