ஹிஜாப் விவகாரத்தில்அடிப்படை உரிமை காக்கப்படும்: உச்ச நீதிமன்றம்

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தட விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை தாங்கள் கவனித்து வருவதாகவும், தேவைப்பட்டால் சரியான நேரத்தில் தலையிடுவோம் என்றும் தெரிவித்தது.

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் புதிய பிரச்னை உருவானது. அங்குள்ள அரசு PUC கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவியர் தலையில் முக்காடாக அணியும் ஹிஜாபை வழக்கம்போல் அணிந்து வந்தபோது வகுப்பில் அமரக் கூடாது என நிர்வாகம் கூறியது. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவியர்களில் ஒருசிலர் காவி துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர், இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய கூடுதல் அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் தீா்ப்பு வெளியாகும் வரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அல்லது காவித் துண்டு போன்றவற்றை அணிந்துகொண்டு மாணவா்கள் வரக் கூடாது என இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர். வழக்கு விசாரணை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து மாணவி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தயவுசெய்து இந்த விவகாரத்தை பெரிய அளவில் பரப்ப வேண்டாம். என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியும். யோசித்துப் பாருங்கள், இவற்றை டெல்லிக்கு கொண்டு வருவது முறையா? அதுவும் தேசிய அளவில்? இந்த வழக்கில் தவறு ஏற்பட்டால் நிச்சயமாக காப்போம். ஒவ்வொரு குடிமகனின் அரசியல் சாசன உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.