உக்ரைன் மீது ரஷியா நாளை போர் தொடுக்கலாம்…! 3 ம் உலகப்போர் மூளுமா…?

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷியா அந்நாட்டின் எல்லையில் படைகளை குவித்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா, நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை போர் விமானங்கள், கப்பல்கள், படைகளை அனுப்பி வருகின்றன.

உக்ரைன் எல்லையையொட்டிய தனது எல்லைப் பகுதியான பெலாரஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் ஏறக்குறைய 1 லட்சம் வீரர்களை நிறுத்தி இருந்த ரஷியா தற்போது அந்த எண்ணிக்கையை 1.30 லட்சமாக உயர்த்தி உள்ளது.

இதையடுத்து, அமெரிக்கா கீவ் உள்ளிட்ட உக்ரைன் நகரங்களில் உள்ள தூதரக அதிகாரிகள், அமெரிக்கர்கள் வெளியேறும்படி கேட்டுக் கொண்டது. மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் உத்தரவின் பேரில் 3000 அமெரிக்க ராணுவத்தினர் உக்ரைன் எல்லையில் இருந்து 100கிமீ தொலைவில் போலாந்து எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ரஷியா படைகளும் உக்ரைனின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். போர் தொடுக்கும் பட்சத்தில், ரஷியாவுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா, நேட்டோ படைகளும் தயாராக உள்ளன. இதனால், 3ம் உலகப் போர் மூளும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிப்ரவரி 16ஆம் தேதி நாளை ரஷியா உக்ரைன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளது என்று சில மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அந்த நாளன்று உக்ரைன் மக்கள் ஒற்றுமையுடன், தேசிய கொடியை ஏற்றி, தேசிய கீதத்தைப் பாட வேண்டும் என்றும் அந்நாட்டு அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை உக்ரைன் அதிபர் உறுதிசெய்யவில்லை; அந்தச் செய்திகள் குறித்து சந்தேகம் வெளியிடும் நோக்கிலேயே விலாடிமிர் ஜெலன்ஸ்கி இவ்வாறு மக்களிடம் கோரியுள்ளார்,” என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்ற வாரம் உக்ரைன் – ரஷிய எல்லைக்குச் சென்று அங்குள்ள தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை சந்தித்தார் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி .

இதனிடையே, ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கொல்ஸ் இன்று ரஷிய அதிபர் புதினை சந்திக்கிறார். அப்போது உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வார் எனத் தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.