காதல் திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு – செங்கல்பட்டு போலீஸார் தீவிர விசாரணை

செங்கல்பட்டில் திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில் மர்மமான முறையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட கல்பாக்கம் அடுத்த நரசாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் ஆவார். இவரது மகள் நிஷாந்தி (வயது19) இவருக்கும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் (பெலாகவி) மாவட்டத்தைச் சேர்ந்த மக்புல் (வயது22) என்ற இளைஞருடன் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

நாளுக்குநாள் மக்புல் மீது காதல் அதிகரித்த நிலையில் முகநூலில் எத்தனை நாள்தான் காதலிப்பது மக்புலை நேரில் பார்க்க வேண்டும் என நிஷாந்தினிக்கு தோன்றியுள்ளது. இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலனை சந்திப்பதற்காக கர்நாடகத்துக்கு சென்றுள்ளார். என்னை உடனடியாக திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் திருமணமாகி சில மாத காலம் கர்நாடகாவில் வசித்து வந்துள்ளனர் ஓரளவுக்கு வசதியாக வாழ்ந்து நிஷாந்தினி கர்நாடகாவில் போதிய வசதி கிடைக்காத காரணத்தால் தன் தந்தைக்கு செல்போன் மூலம் தொடர்புகொண்டு கண்ணீர் மல்க பேசியுள்ளார். மகள் பேசியதைக் கேட்டு மனம் இரங்கிய தந்தை ராஜேந்திரன் தன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதனிடையே கல்பாக்கம் வந்து காதல் ஜோடி சில மாதங்களாக நிஷாந்தினின் தந்தைக்கு சொந்தமான தனியாக உள்ள வீட்டில் வசித்துவந்தனர்.

இரு தினங்களுக்கு முன்பு நிசாந்தினியின் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கல்பாக்கம் அணுசக்தி துறையின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த மக்புல் பொழுதுபோக்கிற்காக நண்பர்களுடன் இருந்துள்ளார். நேற்று பணிக்கு வராததைக் கண்ட நண்பர்கள் மக்புல்லை காண வீட்டிற்கு வந்தபொழுது வீட்டில் உள்ளிருந்து புகைவந்ததை கண்டுள்ளனர். அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்ததில் உடம்பில் வெட்டுக்காயம் மற்றும் தீக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனிடையே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த திருக்கழுக்குன்றம் காவல்துறை ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை மற்றும் தடயங்களை சேகரிக்கும் நிபுணர்களை வைத்து மரணத்திற்கான காரணங்களை தேடிவந்தனர்.

காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையில் மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றார். ஆனால் காவல்துறை தரப்பில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.