ஊடகவியலாளரின் வீட்டில் பட்டப்பகலில் வீடு உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு!

வவுனியாவில் பெண் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில் பட்டப்பகலில் வீடு உடைத்து பணம், நகைகள், கமரா என்பன திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் பெண் ஊடகவியலாளர் ஒருவர் செய்தி அறிக்கையிடல் ஒன்றுக்காக காலை 10.50 மணிக்கு வீட்டில் இருந்து சென்றுள்ளார். கணவர் வர்த்தக நிலையத்திற்கும் பிள்ளைகள் தனியார் கல்வி நிலையத்திற்கும் சென்றுள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் மதியம் 12.15 மணியளவில் கடமை முடிந்து தனது பிள்ளையுடன் வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து காணப்பட்டுள்ளது. வீட்டின் இரு அறைகளிலும் காணப்பட்ட அலுமாரிகள் உடைக்கப்பட்டு இருந்ததுடன், வீட்டில் இருந்த பொருட்களும் பரவிக் காணப்பட்டுள்ளன.

அத்துடன், வீட்டில் இருந்த சங்கிலி, மோதிரம், கைசெயின், தோடு உள்ளிட்ட 14 பவுண் நகைகள், 42 ஆயிரம் ரூபாய் பணம், கமரா, தொலைபேசி, பென்ரைவ் உள்ளிட்ட பல லட்சம் பெறுமதியான பொருட்கள் காணாமல் போயிருந்தன. இதனையடுத்து வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டையடுத்து வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர், வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தடயவியல் பொலிசார் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.